வங்கிகளுக்குச் சொந்தமாகும் இலங்கையர்களின் பெருமளவிலான தங்க நகைகள்
இலங்கையில் வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல், மக்கள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து, பின்னர் அதனை மீட்க முடியாமல் திண்டாடுகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடகு வைக்கப்படும் நகைகளை மக்களால் மீட்க முடியாத நிலையில், அவை வங்கிகளுக்குச் சொந்தமாகும் நிலை காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்றைய சமூகத்தில், பெரும்பாலான மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறியுள்ளது. மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இரண்டு வேளை உணவு மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் மாதாந்தம் குறைந்தபட்சம் 94,945 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. ஆனால், அந்தக் குடும்பத்தின் வருமானம் 75,882 ரூபாவாகவே உள்ளது.
இந்த இடைவெளியை மக்கள் கடன் பெற்றே சமாளிக்கின்றனர். வாழ்க்கைச் செலவு மாதந்தோறும் கண்முன்னே மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பணவீக்கமாகும்.

எமது நாட்டு மக்களுக்கு தற்போது நடைமுறைச் சாத்தியமான நலன்புரித் திட்டங்கள் அவசியமாக உள்ளன. இலங்கையில் நடைமுறையில் உள்ள முக்கியன நலன்புரித் திட்டம் அஸ்வெசும ஆகும். ஆனால், அதற்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட அதே அளவில் பேணாமல் குறைத்துள்ளனர்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அஸ்வெசும திட்டத்திற்காக 231 பிலிலியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய வரவு செலவுத்திட்டத்தில் அந்த ஒதுக்கீடு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.
இன்று மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் அளவை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தங்க நகைகள், மோதிரங்கள் மற்றும் மாலைகள் போன்றவற்றைக் கூட அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வேறு வழியில்லாத காரணத்தினால், குடும்பத்திற்கான உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தங்களிடம் உள்ள நகைகளை அடகு வைக்கின்றனர்.
ஆனால், உரிய காலத்திற்குள் பணத்தைச் செலுத்தி அந்த நகைகளை மீட்டுக்கொள் முடியாததால், அவை வங்கிகளுககுச் சொந்தமாகி விடுகின்றன.
அதன் பின்னர் வங்கிகள் அறிவித்தல்களை வெளியிட்டு, அவ்வாறு தம்வசமான நகைகளைப் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்கின்றன. இவ்வாறான செய்திகள் தற்போது பத்திரிகைகளில் அதிகளவில் வெளியாகி வருகின்றன. இத்தகையதொரு நிலைமையே தற்போது எமது நாட்டில் உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri