இலங்கை அரசுக்கு இடியாக விழுந்த சுற்றுலாத்துறை வருவாய் - மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
கடந்த ஆண்டை இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் சுற்றுலாத் துறையிலிருந்து பெறப்பட்ட வருமானம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைய, மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில், 2026 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாத்துறை மூலமாக நாடு பெற்ற வருமானம் 1,360 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை வருமானம் வீழ்ச்சி
இருப்பினும், 2025 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாத்துறை மூலமாக பெற்ற வருமானம் 1,543.1 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத்துறை மூலமாக நாடு பெற்ற வருமானம் 11.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு மே மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 155.7 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் அது 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் பெறப்பட்டிருந்தது.
புலம்பெயர் தொழிலாளர்களால் பெறப்பட்ட வருமானம்
இதற்கிடையே, 2026 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து நாடு 3,909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், புலம் பெயர் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப் பரிமாற்ற வருமானம் 3,102.2 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
அதற்கேற்ப, இந்த ஆண்டு புலம் பெயர் தொழிலாளர்களிடம் இருந்து வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.