நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: அவசர உயர் மட்ட கலந்துரையாடல் கூட்டம்
தென்மேற்கு பருவமழைக் காலநிலை காரணமாக நாட்டில் வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் நேற்று(22.06.2026) வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாடளாவிய ரீதியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன.
600 பிரிவுகளில் விசேட தணிக்கை
இதன்படி, அவசரக் குறுகிய கால நடவடிக்கையாக அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப்படுத்தல் பணிகள் குறித்த விசேட சுற்றறிக்கைகளைத் துரிதமாக வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்குள் நாட்டின் அதிக அபாயகரமான 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் விரிவான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இங்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் கண்காணிப்பு மற்றும் கடுமையான சட்டம்
டெங்கு ஒழிப்புப் பணிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காக முப்படைகளின் தலைமையில் விசேட கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேலும் கடுமையானதாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், தற்போது பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 'சமூக சக்தி' மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் கிராமிய மட்ட டெங்கு ஒழிப்பு பணிகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தற்போது நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்றன டெங்கு நுளம்புகள் பெருமளவில் பெருகும் அதிஅபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த இடங்களை உடனடியாகத் துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, வலுசக்தி அமைச்சின் செயலாளர் ரஸல் அபோன்சு, 'Clean Sri Lanka' செயலகத்தின் பிரதானி எஸ். பி. சி. சுகீஸ்வர ஆகியோருடன், பொது நிர்வாக அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் முப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.