முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடுதலைப் புலிகளுக்கானதல்ல.. சுரேஷ் பிரேமச்சந்திரன் திட்டவட்டம்
தங்களுக்கும் தங்களது போராட்டத்துக்கும் தலைமை தாங்கிய விடுதலைப் வீரர்களை தமிழ் மக்கள் நினைவுகூரக்கூடாது என அரசாங்கம் சிந்திக்கின்றது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடைய உடலுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எனக்குத் தெரியும். அதனைக் குறிப்பிட்டால் அங்கு மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். எனவே அதனை கூற முடியாது" என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவின் கருத்து
அவர் மேலும் தெரிவிக்கையில், "பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்ட பில்லேடனின் உடலுக்கு என்ன நடந்தது என்பதை அமெரிக்கா இதுவரை தெரிவிக்கவில்லை. அவருடைய உடல் கடலில் வீசப்பட்டதா? அல்லது குழி தோண்டிப் புதைக்கப்பட்டதா? உடலுக்கு என்ன நடந்தது என்பது பற்றி யாரும் கூறவில்லை.

அதேபோல் விடுதலைப் புலிகளினுடைய தலைவர் கொல்லப்பட்டார் என்பதை கருணாவும், தயா மாஸ்டரும் நேரடியாக சென்று குறித்த உடல் அவருடையது தான் என்பதை உறுதிப்படுத்தினார்கள் என்ற ஒரு விடயம் கூறப்பட்டது. எனினும் அந்த உடலுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
அந்த உடலுக்கு என்ன நடந்தது என்பதை எவரும் கூற விரும்பவில்லை என்ற உண்மையை சரத் பொன்சேகா தற்போது கூறியிருக்கின்றார்.
அவரைப் போன்றோருக்கு பிரபாகரனுடைய உடலுக்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கலாம்.
சில தலைவர்களது உடல் கிடைத்தால் வரலாற்றில் அவர்கள் நிலைத்து நிற்பார்கள் என்ற அச்சம் அரசிடம் இருந்திருக்கலாம். அரசைப் பொறுத்தவரை அவர்கள் பயங்கரவாதிகள்.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் எந்த இயக்கமாக இருந்தாலும் அவர்கள் விடுதலைப் வீரர்கள். தங்களுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் வீரர்களை தமிழ் மக்கள் நினைவுகூரக்கூடாது என்று அரசு சிந்திக்கின்றது. அது சரியானது அல்ல.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஆனால் அவ்வாறுதான் ஆளுந்தரப்பு சிந்திக்கும். அவ்வாறே இராணுவத் தலைவர்களும் சிந்தித்திருக்கின்றார்கள்.

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது அங்கு வந்த இனவாதக் கும்பல் பிரபாகரனின் புகைப்படத்தை எரித்து பல கோசங்களை எழுப்பி நினைவேந்தல்களைச் செய்ய முடியாது எனக் குழப்பியிருந்தது.
தென்பகுதியில் இவ்வாறான பல நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே உள்ளன. முள்ளிவாய்க்கால் தினம் என்பது பிரபாகரனுக்குரிய தினம் அல்ல. முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவதற்கான தினமே அதுவாகும்.
யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ ஏன் பிரித்தானியாவிலோ நினைவுகூர்ந்தாலும் அது யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூருவதாகவே அமையும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை குழப்பக்கூடிய இனவாத கும்பலானது தமிழ் மக்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குகின்ற போது அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.
தாங்கள் இனவாதிகள் அல்லர் எனக் காட்டிக்கொள்ளக்கூடிய தற்போது உள்ள ரில்வின் சில்வா, அநுரகுமார திஸாநாயக்க, பிமல் ரத்நாயக்க போன்றோர் தாங்கள் இனவாதிகள் அல்லர் என்பதை தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் வெளிக்காட்டுகின்றார்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri