டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகள் தொடர்பில் வெளியான நற்செய்தி
இந்தியப் (India) பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு, பிரித்தானிய [UK) அரசாங்கத்தின் முன்மொழிவின் கீழ் அந்த நாட்டுக்கு வருவதற்கான உரிமை வழங்கப்படவுள்ளது.
சுமார் 60 இலங்கைத் தமிழ் ஏதிலிகள், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அந்தத் தீவில் ஒரு தற்காலிக முகாமில் தங்கியுள்ளனர். இந்த தீவில் இரகசிய பிரித்தானியா - அமெரிக்க இராணுவத் தளம் இயங்கி வருகிறது.
முன்னதாக, இவர்கள் கனடாவுக்கு செல்லும் வழியில் படகு பழுதடைந்தமையால், இந்த தீவில் அடைக்கலம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஏதிலிகளை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதை அந்நாட்டு அரசாங்கம் முன்பு எதிர்த்தது.
வழங்கப்பட்டுள்ள அனுமதி
எனினும், புதிய அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்துக்கு அமைய அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதற்கான முன்மொழிவை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அந்நாட்டு அரச சட்டவாதிகள் இன்று அறிவித்துள்ளனர்.
இதன் கீழ், குற்றவியல் தண்டனைகள், நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இல்லாத அனைத்து குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களின் துணையில்லாத குடும்பங்கள் நேரடியாக பிரித்தானியாவுக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செயற்பாடு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இந்த நடவடிக்கையை நீதிக்கான நீண்ட போரில் மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று விபரித்துள்ளனர்.
மேலும், குறித்த ஏதிலிகள் குழுவில் 16 சிறுவர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |