பொசன் பௌர்ணமி தினத்தில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
இன்றைய சமூக கட்டமைப்பில் அழிந்து கொண்டிருக்கும் நற்பெறுமானங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் மீண்டும் மீட்டெடுத்து நாகரிகம் நிறைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கான அறிவிப்பு
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இது போன்றதொரு பொசன் பௌர்ணமி தினத்திலேயே, இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றி, பெருமைமிக்க நாகரிகமொன்றிற்கு பாதை அமைத்த உயரிய பௌத்த தர்மம் இந்நாட்டிற்கு கிடைத்தது.
தேரவாத பௌத்த தத்துவத்தினதும் பாரம்பரியத்தினதும் மையமாக எமது நாடு உருவான ஆரம்பமும் மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் இணைந்து வரலாற்றில் பதியப்பட்டது.

இது சமூக மாற்றத்துடன் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தக் காரணமான அந்த அற்புதமான நிகழ்வு, வெறும் மத ரீதியான அர்த்தத்திற்கு அப்பால் , எமது நாட்டின் கலாசார, சமூக, அரசியல் ஆகிய ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது.
ஒரு தேசமாக எழுச்சி பெறுவதற்கான பலமான அடித்தளம் பௌத்த தத்துவத்துடன் எமக்குக் கிடைத்த அதேவேளை, கல்வியில் மாற்றத்தையும் ஏற்படுத்திய பௌத்த தர்மம், விகாரைகளையும் பிரிவெனாக்களையும் உருவாக்கி நாட்டு மக்களிடையே ஆன்மீக புரட்சியை ஏற்படுத்துவதுடன், அறிவை வழங்கும் சமூகப் பணியையும் நிறைவேற்றுவதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.
அது மாத்திரமன்றி கட்டிடக்கலை, ஓவியக் கலை, நீர்ப்பாசனம், வீடமைப்பு, சிற்பக் கலை போன்ற கலைப் படைப்புகளில் புதிய மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் எமது தேசத்தை பெருமைமிக்க தேசமாக உலகின் முன் தூக்கி நிறுத்தியது.
நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
அவ்வாறான பெருமைமிக்க, மேலான வரலாற்றின் இன்றைய பாரம்பரிய வாரிசுகளான நாம் அனைவருக்கும், இன்று சமூகத்தினுள் அழிந்து கொண்டிருக்கும் நற்பெறுமானங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் மீண்டும் மீட்டெடுத்து நாகரிகம் நிறைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது இன்றைய தினத்தில் நம்மீது சுமத்தப்பட்டுள்ள தவிர்க்க முடியாத பொறுப்பாகும்.
அதனடிப்படையில் நாடாளுமன்றம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் நாகரிகமான மாற்றமொன்றைக் ஏற்படுத்தும் இந்த போராட்டத்தில் நாம் இன்னமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

நெறிமுறை இல்லாத நாடொன்று முன்னேற்றத்தை அடைய முடியாது. மஹிந்த தேரர் போதித்த சுல்லஹத்திபதோபம சூத்திரம் படிமுறையான பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
பௌத்த தர்மத்துடன் இந்நாட்டிற்குக் கிடைத்த அந்தப் பெருமைமிக்க நாகரிக சமூகத்தை மீண்டும் இலங்கை மண்ணில் மீள் நிலைநிறுத்துவதன் மூலம், நாட்டிற்குத் தேவையான மானிட ஒழுக்கவியல், சமூகவியல் மற்றும் சூழலியல் சார்ந்த புதிய மனப்பாங்குகளைக் கொண்ட நவீன நாகரிக தேசத்தை கட்டியெழுப்புவதற்காக மென்மேலும் உறுதி பூண்டு கைகோர்த்துக் கொள்வோம்.
உங்கள் அனைவருக்கும் கருணை, இரக்கம், ஞானம் ஆகியவற்றால் இதயங்களை ஒளிரச்செய்யும் புண்ணியமிக்க பொசொன் தின வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri