ஒஸ்கார் விருதுகளில் போட்டியிடும் இலங்கைத் திரைப்படம்
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஒஸ்கார் விருதுகளின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவில் போட்டியிட இலங்கைத் திரைப்படம் ஒன்றைப் பரிந்துரைக்கத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதற்காக, 'இலங்கைக்கான தேசிய ஒஸ்கார் தெரிவுக் குழு' (NOSCSL) எனும் ஒன்பது பேர் கொண்ட விசேட நிபுணர் குழுவை கூட்டுத்தாபனம் நிறுவியுள்ளது.
இலங்கைத் திரைப்படம்
இக்குழுவானது சர்வதேசத் தரநிலைகள் மற்றும் ஒஸ்கார் அகாடமியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இலங்கையின் உத்தியோகபூர்வப் பரிந்துரையைத் தெரிவு செய்யும் பொறுப்பை முழுமையாக ஏற்கும்.

திரைப்படத் தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவானது விண்ணப்பிக்கப்படும் திரைப்படங்களின் கலைத் திறன், கதை சொல்லும் விதம் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை மதிப்பீடு செய்து, தகுதியான ஒரு திரைப்படத்தைப் பரிந்துரைக்கும்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஒஸ்கார் விருது
ஒஸ்கார் போட்டிக்கு விண்ணப்பிக்கும் திரைப்படங்கள் 40 நிமிடங்களுக்கு மேல் நீளம் கொண்டதாகவும், 50 சதவீதத்திற்கும் அதிகமான வசனங்கள் ஆங்கிலம் அல்லாத மொழியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இந்தப் பரிந்துரைக்குத் தகுதி பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட திரைப்படம் 2025 ஒக்டோபர் 1 முதல் 2026 செப்டம்பர் 30 க்குள் இலங்கையின் வணிக ரீதியிலான திரையரங்குகளில் குறைந்தது 7 நாட்கள் தொடர்ந்து திரையிடப்பட்டிருக்க வேண்டும்.
அத்துடன் தயாரிப்பு முதலீட்டில் 51 சதவீதம் இலங்கைப் பிரஜை அல்லது உள்நாட்டு நிறுவனத்தைச் சார்ந்ததாக இருத்தல் அவசியம். இந்த முயற்சியின் மூலம் இலங்கையின் கலாசாரம் மற்றும் கலைத்திறனைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதே திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பிரதான நோக்கமாகும்.