இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பான முக்கிய தீர்மானம்
புதிய இணைப்பு
இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் இன்று (08.11.2023) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை (09) விவாதம் நடத்தப்பட்டு பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கிரிக்கெட் இடைக்கால சபை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பானது பக்கச் சார்பானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்ட அவர் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு வருகின்றது என கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08.11.2023) இடம்பெற்றுவரும் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் இடைக்கால சபை
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பக்கச் சார்பானது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லையென்றும் மக்கள் உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் அதனை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளதென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சூதாட்ட ஷம்மியா , அமைச்சர் ரொஷானா முக்கியம் என்பதனை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |