இலங்கை கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: கால அவகாசம் தேவை என கோரிக்கை
இலங்கை கிரிக்கெட் அணி இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடர்பான மனு இன்று (05.11.2023) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி உள்ளது.
வழக்கு விசாரணை தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால கட்டுப்பாட்டு குழு
இதன்போது, வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமது கட்சிக்காரரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு கால அவகாசம் தேவை என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி வழக்கு விசாரணை டிசம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதுவரை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.