பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் விகாரமஹாதேவி பூங்காவில் உரையாற்றியதாகக் கூறப்படும் பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கறுவாகாடு பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைமையக அமைப்பாளர் ஜகத் பஸ்நாயக்க அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக் கப்பட்டுள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, பலாங்கொட கஸ்ஸப தேரர் அடங்கிய குழுவினர் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 22 அன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த பலாங்கொட கஸ்ஸப தேரர், இரு கத்திகளுடன் இருவர் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்ததாகவும், அவர்கள் பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டவர்கள் என்றும் கூறியிருந்தார்.
எனினும், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியது என பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
மேலதிக விசாரணை
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98-வது பிரிவின் கீழ் பொய்யான தகவல்களைப் பரப்புவது குற்றமாகும் எனக் குறிப்பிட்ட பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக ஊடக நிறுவனங்களிடமிருந்து செம்மைப்படுத்தப்படாத காணொளிகளை (Unedited Footage) பெற்றுத்தர உத்தரவிடுமாறு கோரினர்.

பொலிஸாரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, கஸ்ஸப தேரரின் உரை தொடர்பான தொகுக்கப்படாத காணொளிப் பதிவுகளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை விரைவாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்குக் கட்டளையிட்டார்.