குப்பை மேடாக மாறும் பருத்தித்துறை - கொடிகாமம் வீதிக்கரைகள்: அழகிழக்கும் தாயக நிலங்கள் (Photos)
பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணிக்கும் வழியில் செல்லும் பயணிகள், வெறுக்கத்தக்க கருத்துக்களை உமிழும் வண்ணம் AB31 பாதையின் ஓரங்கள் குறை சொல்ல காரணமாகின்றன.
குப்பைத் தொட்டியில் போட்டு குப்பை மேட்டில் காணப்பட வேண்டியவை வீதியின் கரைகளை நிறைத்து அழகை கெடுத்து விசனத்தை கொடுக்கின்றன.
திட்டமிட்டே வேண்டுமென்று செய்வதாக கருதும்படி குப்பைகளை பொலித்தீன் பைகளில் இட்டு கட்டி வந்து கொட்டி விட்டுப் போகிறார்கள். வீதியின் ஓரங்களில் அவை நீண்ட நாட்களாக கிடந்திட கொடிகள் மூடிக்கொள்ள புற்கள் வளர்ந்து போகின்றன.
அழகழிந்து போகும் வீதியோரம்
ஆனாலும் குப்பைகள் உக்காது கிடக்கின்றன. மீண்டும் மீண்டும் அதன் மேலே கொட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.
கழிவு துணிகள், பிளாஸ்ரிக் போத்தல்கள், சிறுவர்களின் கழிவகற்றல் துணிகள், பெண்களின் சுகாதார துண்டுகள், உடைந்த கண்ணாடிகள், விவசாய மருந்து வெற்றுப் போத்தல்கள் என குப்பைகளை பெரிய வரிசையில் வகைப்படுத்த முடிகிறது.
பருத்துறையில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணிக்கும் போது வடக்கு வரணி சுடலை வரை இந்த குப்பைகள் வீதியின் ஓரங்களில் கிடந்து அழகழிந்து கிடக்கின்றன.
யாரை யார் குற்றம் சுமத்துவது
வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேச சபைகளை காலத்துக்கு காலம் குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகும் மனநிலையில்தான் அவ்வீதியை பயன்படுத்துவோர் இருப்பதை அவர்களோடு பேசும் போது உணர முடிந்தது.
குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதை மக்கள் கைவிட்டால், வீதி குப்பைகளால் நிறைவதை தடுக்கலாம்.
இதனை மக்கள் உணர வேண்டும். நீண்ட பெருவெளியில் கொண்ட வீதியின் இந்த பகுதிக்கு குப்பைகளை காவி வருவதை விடுத்து தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே அவற்றை சேகரித்து உரிய முறைகளில் குப்பைகளை அகற்ற முயற்சிக்கலாம்.
இந்த வீதிக்கு குப்பைகளை எடுத்து வருவதற்கு குறைந்தது முன்று கிலோமீற்றர் தூரம் குப்பைகளோடு பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூய்மையை பேணலாம்
AB31 பாதையில் உள்ள தொண்டமனாறு சந்தி திருப்பத்திற்கு அண்மையில் அதிகளவில் காணப்படும் குப்பைகள் வீதியோர தாவரங்களையும் அவற்றை அடுத்து அமைந்துள்ள நீரேந்து பகுதியையும் பெருமளவில் பாதிக்கும் என்பது இதுவரை உணரப்படவில்லை.
வரலாற்றுப் பெருமை கொண்ட செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தை நினைவுக்கு கொண்டுவரும் பெயர்களில் இதுவும் ஒன்று.
அத்தகைய சூழலில் இந்த பெயர்ப்பலகை சந்தியில் தூய்மையை பேணலாம் என்பதும் குறிப்பிட வேண்டியதாகும்.
உக்காது உருக்குலைக்கும்
AB31 வீதியில் கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் உக்கும் நிலையற்றவை. இவை நீண்ட நாட்களாக அந்த மண்ணில் கிடந்து மண்ணை உருக்குலைக்கும்.
அந்த மண்ணுக்கே உரிய தாவர, விலங்குகளையும் அழிப்பதோடு உயிர்ப் பல்வகையை இழக்கச் செய்யும்.
மனித உடல்களை மெல்லக் கொல்லும் புற்றுநோய் போல் மண்ணின் இயற்கை அமைப்பை இத்தகைய உக்காத கழிவுகள் மெல்ல மெல்ல மாற்றியமைத்து மண் இழையமைப்பை உயிர்த்தன்மைக்கு பொருந்தாத முறைக்கு மாற்றி விடும் என துறைசார் அறிஞர்களிடையே பேசும் போது குறிப்பிட்டிருந்தனர்.
தாயகம் பற்றிய எண்ணம்
ஈழத்தமிழர் உணர்வில் ஊறிப்போயிருக்கும் தமக்கென ஒரு தாய்நிலம் என்ற எண்ணத்தில் தாங்கள் வாழும் மண்ணை சுத்தமாகவும் இயற்கை அமைப்பு கெடாதும் பேணல் என்பது அவர்களின் மண்ணை நேசிக்கும் உயர்ந்த பண்பை யாழ் வரும் வெளிநாட்டவருக்கு எடுத்துக் கூறும்.
உலகம் மாறிப் போகும் தமிழருக்காக என்று தன் ஆதங்கத்தையும் முன்னாள் போராளியொருவர் எடுத்துரைத்திருந்தார்.
கொட்டுவதும் பின்னர் சிரமதானம் என்று சுத்தம் செய்வதுமாக இருக்கும் பொன்னான நேரங்களை வீணாக்காது சேரும் குப்பைகளை அகற்றும் நல்லதொரு பொறிமுறையை கைக்கொள்ள மக்களாகிய ஒவ்வொருவரையும் ஒரு நேர்கோட்டில் இணைத்து அவர்கள் தங்களை அதற்காக மாற்றிக்கொள்ள செயற்றிட்டங்களை முன்னெடுப்பது ஒன்றுதான் இத்தகைய இடர்களை களைவதற்கான ஒரே வழி.