இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சினை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே!
இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சனை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யத்தின் இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"MPP அரசாங்கம் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்று கூறி வருகிறது. இது இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சனை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே ஆகும். அவர் எழுதிய முழு விபரமும் வருமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பாக உருவாக்கப்பட்ட 60/1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் நடைமுறைச் செயற்பாடு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகம் 63 வது கூட்டடத் தொடரில் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மனித உரிமைகள் விடயங்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய விரிவான அறிக்கையை 66 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா விவகாரம்
சிறீலங்கா அரசு வழக்கம்போலவே தீர்மானத்தை முழுமையாக நிராகரித்துள்ளது. இது இலங்கை மக்களை இனரீதியாக துருவமயப்படுத்தும் என்றும் கூறியுள்ளது. சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் இருப்பதையே விரும்பவில்லை. அதனுடைய கவலையெல்லாம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து இந்த விவகாரத்தை எவ்வாறு அகற்றுவது என்பதே! மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் இருக்கும் வரை சர்வதேச மட்டத்தில் அது பேசு பொருளாகவே இருக்கும்.
இந்த 60/1 தீர்மானம் பொறுப்புக் கூறலில் உள்நாட்டு பொறிமுறையினையே சிபார்சு செய்துள்ளது. அப்பொறிமுறையில் கூட ஐ.நாவின் பிடி எதுவும் இல்லாத வகையில் சுதந்திரமாக சிறீலங்கா அரசை கையாள விட்டுள்ளது. சிறீலங்கா அரசும் ஐ.நா வின் சிறிய பிடியைக் கூட நிராகரித்தே வந்தது. அரசின் வற்புறுத்தலினால் ஆரம்ப முன் மொழிவில் இருந்த மென்மையான பிடிகள்கூட முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டன. ஆரம்ப முன் மொழிவில் சுயாதீன சிறப்பு சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்தியேக நீதித்துறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என முன்வைத்த கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது. இராணுவ மயமாக்கம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. உள்ளகப் பொறுப்புக் கூறல் தொடர்பான அழுத்தமான சொற்பதங்களும் நீக்கப்பட்டன.
இனப்பிரச்சினை என்ற சொல் முன்னர் நீக்கப்பட்ட போதும் பின்னர் பல்வேறு விமர்சனங்கள் காரணமாக இன மோதல் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளக பொறிமுறையில் அனைத்து பிடிகளும் நீக்கப்பட்டு உத்தியோகபூர்வமற்ற மறைமுக கண்காணிப்புக்கு மட்டும் வழி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய மென் அழுத்தத்தை மட்டும் பிரயோகிக்க முற்படுகின்றது. உள்ளக பொறுப்புக் கூறலில் பிடிகள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட சர்வதேச பொறுப்புக் கூறலை முழுமையாகக் கைவிட்டது என்றும் கூறிவிட முடியாது. சாட்சியங்கள் சேகரிப்பு தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை அடிப்படையாக வைத்து தங்கள் நாடுகளில் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறீலங்கா தொடர் கண்காணிப்பில் இருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொறுப்புக் கூறல் விடயத்தில் தமிழ் மக்கள் மன ஆறுதல்களை பெற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள் இவை மட்டும்தான். நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்பதே அறிக்கையின் தலைப்பு. நல்லிணக்கம் முதலில் வருவதால் பொறுப்புக் கூறலை விட நல்லிணக்கத்தையே முதன்மைப்படுத்துவது போல தோற்றம் தெரிகின்றது. ஆனால் இத்தனைக்கும் சர்வதேசரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற விவாதம் பொறுப்புக் கூறல் இல்லாமல் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதே.
நல்லிணக்கம்
நல்லிணக்கம் தொடர்பாக இரண்டு விடயங்கள் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று அதிகார பகிர்வு சார்ந்த கடப்பாட்டை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இரண்டாவது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தி வடக்கு - கிழக்கு மாகாணம் உட்பட அனைத்து மாகாணங்களின் செயல் திறன்மிக்க இயங்குகையை உறுதி செய்ய வேண்டும். அதிகாரப் பகிர்வு பற்றி மேலோட்டமாகவே கூறப்பட்டுள்ளது. எத்தகைய அதிகார பகிர்வு? ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வா? சமஸ்டியாட்சிக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வா? என்பது பற்றி எதுவும் கூறவில்லை. இது விடயத்தில் சிறீலங்கா அரசுடன் சர்ச்சைகளுக்கு போக விரும்பவில்லை என்பதையே இது வெளிக்காட்டியுள்ளது. சிறீலங்காவில் இரண்டு முகங்கள் இருக்கின்றன. பெருந்தேசிய வாதத்தின் லிபரல் முகம், பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகம் என்பவையே அவ்விரண்டுமாகும்.
இதில் லிபரல் முகம் அதிகாரப்பகிர்வு தொடர்பாக செல்லக்கூடிய எல்லை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வு மட்டும் தான். சிங்கள தேசத்தில் உள்ள சிறிய இடது சாரி குழுக்கள் தவிர்ந்த ஏனையவை எவையும் சமஸ்டி பற்றி உச்சரிக்கவே தயாராக இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு இவ்வாறான லிபரல் முகம் கூட கிடையாது. அதன் வரலாறு என்பது முழுக்க முழுக்க பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகமாகும். இதனால் தான் இனப்பிரச்சினை என்ற சொல்லைக் கூட சகித்துக் கொள்ள அது தயக்கம் காட்டுகின்றது.
இனவாத முகத்தின் உறுதியான கோசம் இனப்பிரச்சனை என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதே! தேசிய மக்கள் சக்தி இந்த இனவாத முகத்திற்கு இடதுசாரி முகமூடியைப் போடுவதற்கே முயற்சிக்கின்றது.
பல சந்தர்ப்பங்களில் இந்த முகமூடி கிழிந்து தொங்கியது என்பதே வரலாறு. அதிகாரப் பகிர்வு சம்பந்தமான விடயங்களை உரையாடலுக்கு எடுக்க கூட அது இன்று தயாராக இல்லை. இந்த இனவாத முகம் காரணமாகத்தான் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு கூட அது தயக்கம் காட்டுகின்றது. இந்த தயக்கத்திற்கு வாக்குச் சரிந்து விடும் என்பது மட்டும் காரணமாக இருக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பதில் கூட கால வரையறை எதுவும் குறிப்பிடப்படவில்லை. இங்கும் கூட மென் அழுத்தமே கொடுக்கப்படுகின்றது.
இந்த விடயத்தில் இந்தியா போல அரசியல் யாப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூட கூறவரவில்லை. இந்தியா - மோடி அனுரா கூட்டறிறிக்கையில் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்பதைத் தவிர்த்து அரசியல் யாப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்றே கூறியிருந்தது.
ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியப் பிரதிநிதி 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் எனக் கூறியிருந்தார். எனவே நல்லிணக்க விவகாரத்தில் அனுசரணை நாடுகள் இந்தியாவிருந்து கூட வெகு தொலைவில் உள்ளது போலத் தெரிகின்றது. மனித உரிமைகள் மேம்படுத்தல் விவகாரத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது அதிலும் கூட பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் - முஸ்லீம் மக்களுக்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் விகிதாசார அடிப்படையில் தமிழ் - முஸ்லீம் மக்களை அதிகம் பாதிக்கின்றது எனத் தரக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் வரை அதன் பிரயோகம் இடைநிறுத்தப் படல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது அத்துடன் புதிய சட்டம் சர்வதே சட்டத்துடன் ஏற்புடையதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் விவகாரங்களை விட பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான விவகாரங்கள் சற்று அழுத்தமாக கூறப்பட்டுள்ளது எனலாம். எனினும் வழமையான அரசாங்கங்கள் போலவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயக்கம் காட்டி வருகின்றது.
இத்தனைக்கும் ஜே.வி.பி.யினரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்படும் போது ஜே.வி.பி யினர் ஒரு ஆயுத கிளர்ச்சிக்குழு. தற்போது அவர்கள் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு ஆட்சியின்பிடியை இறுக்குவதற்கு பயங்கரவாத்தடைச் சட்டம் தேவையாக இருருகின்றது. கேட்டால் போதைவஸ்துக்காரர்களை அடக்குவதற்கு அச்சட்டம் தேவை என நியாயம் கூறுகின்றனர்.
அமைச்சர் சந்திரசேகர் அதனை வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதன்படி பார்த்தால் போதைவஸ்துக்காரர்கள் இருக்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் உயிர் வாழப் போகின்றது. மொத்தத்தில் இதனை மென் அழுத்தம் எனக் கூறுவது கூட பொருத்தமாக இருக்காது. வேண்டுமென்றால் மிகக் குறைந்த மென்னழுத்தம் எனக் கூறலாம். இவ்வாறு குறைந்த மென் அழுத்த அணுகு முறையினைப் பின்பற்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது வல்லரசுகளின் புவிசார் அரசியல் நலன்களாகும்.
இது பற்றி முன்னரும் இக்கட்டுரையாளர் கூறியிருக்கின்றார். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் இந்தோ - பசிபிக் மூலேபாயத் திட்டத்தில் இலங்கைத் தீவு முக்கிய கேந்திர பிரதேசமாக உள்ளது. இந்த நலன்களைப் பேணுவதற்காக சிறீலங்கா அரசினை முழுமையாகப் பகைத்துக் கொள்ள இவ்வல்லரசுகள் விரும்பவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மேற்குலகம் சார்பான உலக ஒழுங்கைப் பேணுவதற்கு ஒரு கருவியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையை உருவாக்கியது எனலாம்.
சிறீலங்கா அரசு இலங்கைத் தீவில் இந்த வல்லரசுகளின் புவிசார் அரசியல் நலன்களுக்கும் இடம் கொடுக்கும் வரை முழுமையாக அவை பகைக்கப் போவதில்லை. குறிப்பாக மேற்குலம்சார் வல்லரசுகள் இலங்கையை ஒட்டிய கடல் பிரதேசத்தின் ஆதிக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அண்மைக்காலமாக கடும் முயற்சி எடுத்து வருவதை அவதானிக்கலாம். அமெரிக்கா இதற்காக கடும் முயற்சிகளை செய்து வருகின்றது. அண்மைக்காலமாக அதன் நட்பு நாடான யப்பானும் முயற்சித்து வருகின்றது. ஜனாதிபதி அனுராவின் யப்பான் பயணத்தின் போது இது தொடர்பான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பேராசிரியர் கணேசலிங்கம் ஊடகமொன்றில் தனது கட்டுரை மூலம் இதனை விரிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையை இவ்வல்லரசுகள் தமது நலன்களைப் பேணுவதற்கான கருவியாக பயன்படுத்துகின்றன என கஜேந்திரகுமார் முன்வைக்கும் குற்றச்சாட்டிலும் உண்மைகளை இல்லாமல் இல்லை. சிறீலங்கா அரசு உலகின் ஆதிக்கத்துக்காக போட்டியிடும் இரண்டு அணிகளிருந்து சம தூரத்தில் இருப்பதாகவே தன்னைக் காட்டிக் கொள்ள முற்படுகின்றது.
சிறீலங்கா அரசு சீனா – ரஸ்யா அணிப் பக்கம் முழுமையாக சாயுமாக இருந்தால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அழுத்தத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கும். இவ்வாறு சம தூரத்தில் இருப்பதாக காட்டிக் கொள்வதால் தமிழ் மக்களுக்கு இரண்டு அணிகளும் உதவுவதாக இல்லை. பாலஸ்தீனத்தைப் பொறுத்தவரை இந்தக் கோடு தெளிவாக இருந்தது. இதனால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தது போல முழுமையாக பாலஸ்தீன போராட்டத்தை அழிக்க சர்வதேச வல்லரசுகளினால் முடியவில்லை. மற்றைய அணி அப்போராட்டத்தை கருநிலையிலாவது காப்பாற்றும் அணியாக உள்ளது.
இதே புவிசார் அரசியல் தான் ஜெனிவாவில் கோவையை நிரந்தரமாக மூடாமல் இருப்பதற்கும் வழி செய்துள்ளது. சிறீலங்கா அரசை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்றால் கோவையை மூடாமல் இருப்பது அவசியம் என மேற்குலகம் நினைக்கின்றது. சிறீலங்கா அரசு கட்டுப்படும் அளவிற்கு ஏற்ப அதன் அழுத்தங்களும் கூடிக் குறையும். சிறீலங்கா அரசிற்கும் இந்த நகர்வு நன்றாகப் புரியும்.
அதனால் தான் இந்தத் தடவை வாக்கெடுப்பை தவிர்த்து மேற்குலகை குளிர்வித்துள்ளது. இது மேற்குலகை வளைக்கும் ஒரு முயற்சி தான். சிறீலங்கா அரசு இவ்விவகாரத்தில் உயர்மட்ட தத்திரோபாயங்களுடன் நகர்கின்றது எனலாம். இரண்டாவது இந்தியத்தலையீடாகும். இலங்கைத் தீவில் என்ன விவகாரமாக இருந்தாலும் தன்னை மீறி நுழைவதை இந்தியா ஏற்றுக்கொள்வதில்லை. மேற்குலகமும் இலங்கைத் தீவு விடயத்தில் இந்தியாவை அனுசரித்துப் போகவே விரும்புகின்றது.
இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக இருப்பதினாலும், தமது இந்தோ - பசிபிக் மூலோபாயத் திட்டத்தில் முக்கிய கூட்டாளியாக இந்தியாவை வைத்திருக்க விரும்புவதனாலும், இந்தியா பெரிய சந்தையாக இருப்பதனாலும், இந்தியாவை அனுசரித்துப் போவதிலேயே நாட்டம் காட்டுகின்றது. இலங்கைத் தீவு தொடர்பான விவகாரங்களில் “இந்தியாவின் கரிசன முதலில்” என்பதே மேற்குலகத்தின் கொள்கையாக உள்ளது. பொறுப்புக் கூறல் விவகாரத்தையோ, மனித உரிமைகள் விவகாரத்தையோ இந்தியா முக்கியத்துவப்படுத்துவதில்லை.
மனித உரிமைகள் பேரவையில் இது பற்றி பெரிதாக பேசுவதும் இல்லை. இது மேலே வருமாக இருந்தால் நிறைய விடயங்களுக்கு இந்தியாவும் பொறுப்புக் கூற வேண்டி வரும். இந்தியா நல்லிணக்க விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது. அதுவும் 13 வது திருத்தத்திற்கு மேலாக செல்வதை அது விரும்பவில்லை.
குறிப்பாக கூறின் மேற்குலகம் மென் அழுத்தத்திற்கு அப்பால் நகராமல் இருப்பதற்கு இந்தியாவே பிரதான காரணம் எனலாம். மூன்றாவது உள்ளகப் பொறிமுறைக்கு இலங்கை தயார் எனக் கூறுகின்றது. எனவே அதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் மேற்குலகத்திற்கும் மனித உரிமைகள் பேரவைக்கும் உள்ளது. புதிய அரசாங்கம் என்பதால் அதிக அழுத்தம் கொடுப்பதையும் அவை விரும்பவில்லை.
ஜெனிவாவின் களநிலமை இதுதான். இதனால் தான் கஜேந்திரகுமார் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை தேவையற்ற அரங்கு எனக் கூறுகின்றார். ஐ.நா மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களைப் பொறுத்தவரை பலவீனமான அரங்காக உள்ளபோதும் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு சர்வதேச அரங்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை மட்டும் தான் அதனை உச்ச வகையில் பயன்படுத்த வேண்டியது அவசியமானது.
துரதிஸ்டவசமாக அதனை உச்ச வகையில் தமிழ்த்தரப்பு பயன்படுத்தியதா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அரசாங்கம் ஐ.நா உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக சந்தித்து பேசி தனது பக்க விளக்கங்களைக் கொடுத்தது. தமிழ்த் தரப்பிலிருந்து அவ்வாறான முயற்சிகள் எதுவும் பெரிதாக நடக்கவில்லை. இதற்கு முக்கிய நிபந்தனை ஒருங்கிணைந்த அரசியல் தான். தமிழ்த் தரப்பை பொறுத்தவரை மூன்று விவகாரங்களில் ஒருங்கிணைவு அரசியல் அவசியமாக உள்ளது. பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு, ஆக்கிரமிப்புக்களைத் தடுத்தல் என்பவையே அவையாகும்.
பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசியல் கட்சிகள் தனித்தனியாக நகராமல் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளிலிருந்து ஒரு குழுவை உருவாக்கி அதன் மூலம் விவகாரங்களை கையாள்வதே ஆரோக்கியமாக இருக்கும். தமிழ் மக்கள் இதற்கான அழுத்தங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்குவதற்கு ஒருபோதும் தயங்கக்கூடாது. சிறிய சிறிய வெற்றிகளை முதலீடாகக் கொண்டு பெரிய வெற்றியை நோக்கி நகர்வதே இன்றைய நிலையில் புத்திசாலித்தனமானதாகும்" என குறிப்பிட்டுள்ளார்.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
