இலங்கையின் நிதி நெருக்கடி குறித்து வெளியான புதிய தகவல்!
இலங்கை மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்த ஆண்டு நாட்டின் வளர்ச்சி 3 வீதத்தால் சுருங்கும் என மூடிஸ் (Moody's) முதலீட்டாளர்கள் சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் நிதி நெருக்கடியானது அதன் அந்நிய செலாவணி கையிருப்பில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சி 2024இல் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தனது நான்காம் காலாண்டு மற்றும் முழு ஆண்டு வளர்ச்சி எண்களை இந்த வார இறுதியில் வெளியிட வாய்ப்புள்ளதாக அதன் புள்ளிவிவர திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தால் 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பைப் பெறுவதற்கான நாட்டின் முயற்சிகள் மார்ச் 20 ஆம் தேதி அங்கீகரிக்கப்படலாம். இது ஒரு சாதகமான வரவு என்று மூடிஸ் கூறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான முன்னேற்றம் கிரெடிட் பொசிட்டிவ் என்ற சாதக வரவு என்று கருதப்படுகிறது.
ஏனெனில், அது ஏனைய வெளிப்புற நிதியுதவியைத் திறக்கிறது, இது பொருளாதாரம் மீட்சியைத் தக்கவைக்க மற்றும் சமூக சவால்களைத் தணிக்கத் தேவையான உணவு, எரிபொருள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது என்று மூடிஸின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், நாடு இன்னும் அதன் கடனை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், இது அதன் பலதரப்பட்ட கடனாளிகளின் தொகுப்பைக் கருத்தில் கொண்டு இழுபறி செயல்முறையாக இருக்கலாம்.
அத்துடன், நீடித்த பேச்சுவார்த்தை வெளிப்புற நிதியுதவிக்கான அணுகலை ஆபத்தில்
ஆழ்த்தலாம், அத்துடன், தனியார் கடனாளிகளுக்கு அதிக இழப்புகள் ஏற்படக்கூடும்
என்றும் மூடிஸ் கூறியுள்ளது.