உள்ளக பொறிமுறைக்கே ஆதரவளியுங்கள் என ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை வலியுறுத்தல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத் தொடரில் நேற்றைய அமர்வின்போது 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்து மூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் வாசிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளித்து இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றும்போதே நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெளியகப் பொறிமுறை
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப் பொறிமுறையானது இனங்களைத் துருவமயப்படுத்துவதுடன், நாட்டுக்குள் தேவையற்ற பிளவுகளைத் தோற்றுவிக்கும். எனவே, இத்தகைய பொறிமுறைகள் தேசிய செயன்முறைகளைப் பலவீனப்படுத்தும் என்பதால் அவற்றை நாம் நிராகரிக்கின்றோம்.
நல்லிணக்கத்தையும் சுபீட்சத்தையும் அடைவதற்கான தேசிய பொறிமுறைக்கே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தனது ஆதரவை வழங்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை அரசு வெளிப்படைத்தன்மையுடனும் ஒத்துழைப்புடனும் இணைந்து செயலாற்றி வருகின்றது. அதேவேளை, தேசிய ரீதியிலான உள்ளகப் பொறிமுறைகளையே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

அதற்கமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டுப் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களும் முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கை
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவை அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.
மேலும், உள்நாட்டு யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்றவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வரலாற்றில் முதன்முறையாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பீடமேறி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், டித்வா சூறாவளி மற்றும் உலகளாவிய நெருக்கடி நிலை போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தி வெற்றிகரமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24