நாட்டு மக்களுக்காக சொந்த வீட்டை இழந்த ரணில்
போராட்டக்காரர்களால் ஜனாதிபதி ரணிலின் வீடு தீக்கிரையாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. நாட்டு மக்களுக்காக அவர் தனது வீட்டை அல்ல ஒரு வரலாற்றையே இழந்துள்ளார் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் 31 அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைந்துள்ள 130 வீடுகளுக்கான உரிமைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதன்போது அடையாளமாக ஜனாதிபதி சிலருக்கு வீட்டு உரிமைகளை கையளித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி விடுத்த பணிப்புரை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து, இருபது இலட்சம் பேருக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்த போது, எதிர்க்கட்சியின் சில குழுக்கள் அந்தப் பிரேரணையை அலட்சியப்படுத்தின.
ஆனால் ஜனாதிபதி அப்போது சிரித்துக் கொண்டே உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு எமக்குப் பணிப்புரை விடுத்தார். இன்று உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையை வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகளின் உரிமைப் பத்திரங்களைப் பெறுவதன் மூலம், ஒரு பிள்ளையை பாடசாலையில் சேர்க்க, அறுவை சிகிச்சை ஒன்றுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வங்கிக் கடன் பெற முடிகின்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர், இதே நாளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்த ஒரே வீடு போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. அந்தப் போராட்டக்காரர்கள் எரித்தது வீட்டையல்ல, ஒரு வரலாற்றை.
அந்த வீட்டில் பெறுமதிமிக்க நூலகம், மதிப்புமிக்க சிலைகள், மதிப்புமிக்க ஓவியங்கள் போன்று பல பொருட்கள் இருந்தன. அவர் தனது வீட்டை இழந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன நிலையில், உங்களின் வீட்டு உரிமையை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக எமது தலைவர்கள் பதவி விலகிச்செல்லும் போது, வர்த்தகர்கள், கற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது நாட்டிற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் முன்னோக்கி வந்த ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.
நெருக்கடி காலங்களில் மட்டுமே ஒரு உண்மையான தலைவரை கண்டுகொள்ள முடியும். ரணில் விக்ரமசிங்க நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன், அஸ்வெசும மற்றும் உறுமய போன்ற வேலைத்திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பணியாற்றினார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |