ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமைக் கட்டணத்தை முழுமையாக செலுத்திய இலங்கை
2025ஆம் ஆண்டுக்கான, ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் கட்டண நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தியதற்காக இலங்கைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் வழக்கமான பாதீட்டுக்கு முழுமையாக பணம் செலுத்தியதற்காக கொழும்பில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர். ஸ்டெபானி ட்ரெம்ப்ளே தெரிவித்துள்ளார்.
மதிப்பிடப்பட்ட பங்களிப்பு
இலங்கையின் இந்த கொடுப்பனவு 2025ஆம் ஆண்டில் முழுமையாக பணம் செலுத்தப்பட்ட உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை 93ஆக உயர்த்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 93 நாடுகள் மாத்திரமே, 2025 ஆம் ஆண்டுக்கான தமது உறுப்புரிமைக் கட்டணத்தை முழுமையாக செலுத்தியுள்ளன. வளரும் நாடாக, இலங்கையின் மதிப்பிடப்பட்ட பங்களிப்பு 1.3 மில்லியன் டொலர்கள் ஆகும்.
அதேவேளை உறுப்பு நாடுகள் பணம் செலுத்தாததால் ஏற்பட்ட பண நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தற்போது சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் பாதீட்டுக்கு இன்னும் 1.5 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |