இலங்கை பொருளாதார படுகுழியில் விழும் அபாயத்தை கடந்துள்ளது: நஸீர் அஹமட்
பொருளாதாரப் படுகுழியில் விழும் அபாயத்தைக் கடந்துள்ள இலங்கை, நுண் பொருளியலில் ஸ்திரப்படும் கட்டத்துக்கு வந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிசக்தியை தூய்மைப்படுத்தும் மாநாட்டில் உரையாற்றக் கிடைப்பதில் மகிழ்ச்சியடைவதுடன் உரிய நேரத்தில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்தோருக்கும் எனது பாராட்டுக்கள்.
இலங்கை பொருளாதாரம்
இம்மாநாட்டின் நோக்கம் வெற்றியளிக்க இங்குள்ளோரது ஒத்துழைப்புக்கள் மற்றும் ஆலோசனைகள் அவசியம். பொருளாதார படுகுழியில் விழும் ஆபத்தைக் கடந்து பயணிக்கும் இலங்கை, நுண் பொருளாதாரத்தில் ஸ்திரப்படும் கட்டத்துக்கு வந்துள்ளது.
மரபுப் பொருளாதாரத்திலிருந்து நுண் பொருளாதாரத்துக்கு நகரும் முயற்சியை நேரகாலத்துடனே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்திருந்தார்.
இந்த முயற்சிகளால்தான், இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடிந்திருக்கிறது. வெளிநாட்டு அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் நுண் பொருளியல் தவிர்க்க முடியாத சக்தியாகியுள்ளது.
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதியூடாகக் கிடைத்துள்ள 330 மில்லியன் அமெரிக்க டொலரை மீளச் செலுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இறைவரிக் கொள்கைகளிலும் மாற்றம் செய்வது அவசியம்.
அந்நியச் செலாவணிகள்
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வகை சர்வதேச நாணய நிதியங்கள், இடையில் நிறுத்தப்பட்டுள்ள இருதரப்பு முதலீட்டுத் திட்டங்களை மீளவும் ஆரம்பிக்க முன்வந்துள்ளன. இதுவும் அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிகளைத் திறக்கவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பொருளாதார மற்றும் காலநிலைப் பாதுகாப்புத் திட்டங்களால், வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் கவரப்படவுள்ளன.
எனவே, இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கான இத்திட்டத்தில் இணைந்து எமக்குக் கை கொடுக்குமாறு சர்வதேச முதலீட்டாளர்களைக் கோருகிறேன். எங்களது வெற்றி உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இதில் இணைவதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை. இலங்கையில் போதுமானளவு புதுப்பிக்கத்தக்க சக்திகள் உள்ளன.
சர்வதேச முதலீட்டாளர்கள்
இவற்றை அடையாளங்கண்டு உள்ளூர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் செயன்முறைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதுபோன்று காலநிலைச் சவால்களை மட்டுப்படுத்தி அல்லது கட்டுப்படுத்தி சர்வதேச முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதில் இலங்கை கவனம் செலுத்துகிறது. இந்தப் பயணம் வெற்றியளிக்க சர்வதேசம் இலங்கையுடன் கைகோர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிநாட்டு அமைச்சர் அலிசப்ரி, சர்வதேச காலநிலை மாநாட்டின் ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம்,காலநிலை குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன்விஜயவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜேசிங்க மற்றும் அரசின் உயர்மட்ட அதிகாரிக ள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)