அநுரவின் அதிரடியால் திணறும் நிதி மோசடியாளர்கள்! அடுத்து வரும் நாட்களில் சிக்கப்போகும் நபர்கள்
சமகால அரசாங்கத்தின் அதிரடி செயற்பாடுகளால் நிதி மோசடியாளர்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரிய வரி ஏய்ப்பில் ஈடுபட்ட W.M. Mendis and Company Ltd நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.
அச்சத்தில் பல செல்வந்தர்கள்
கடந்த ஆட்சிகளின் போது பல செல்வந்தர்கள் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி, தமக்கான சலுகைகளை பெற்றுக்கொண்டனர். இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பல பில்லியன் ரூபாய் வரி வருமானம் கிடைக்காமல் போயுள்ளது.
இந்நிலையில் ஆட்சியை பொறுப்பேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசாங்கத்தை ஏமாற்றிய செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளார்.
அதன் முற்கட்டமாக 3.5 பில்லியன் ரூபா வரி ஏய்ப்பு செய்த அர்ஜுன் அலோசியஸுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் பலருக்கு எதிராக இவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது நீதிமன்றம் ஊடாக மோசடியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். அதற்கயை நீதிமன்றம் உட்பட பலம் வாய்ந்த அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ளன.
அதேவேளை, அரசாங்கத்திற்கு செலுத்த பல பில்லியன் ரூபா பெறுமதியான வரியை செலுத்தாத மதுபான விற்பனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்திற்குள் முழுமையான வரியை செலுத்த தவறும் மதுபான விற்பனை நிலையங்களின் உரிமை பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டு, புதியவர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.