பல அதிகாரிகளை இடைநிறுத்தியுள்ள மத்திய வங்கி
சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது மத்திய வங்கியின் உள்ளக விசாரணை என்பதால் விபரங்களை குறிப்பிடுவது பொருத்தமானதல்ல என மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் உள்ளக விசாரணை
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீதான மத்திய வங்கியின் உள்ளக விசாரணைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
1,000 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமெனத் தெரிவிக்கப்படும் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி ஊழல் என்பது 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற நிதிச் சலவை மோசடியாகும்.
நாட்டிற்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த மோசடி இதுவரையில் தீர்க்கப்படாத பிரச்சினையாக தொடர்கிறது.
பல ஆண்டுகளாக உறுதியான தொலைநோக்குப் பார்வை கொண்ட வங்கி அமைப்பைக் கொண்ட நாடு என்ற நற்பெயரைப் பெற்ற போதிலும், பத்திர மோசடியானது இலங்கையில் பதிவாகிய மிகப்பெரிய நிதி மோசடியாகவும் கருதப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்கும் பெரும் பின்னடைவாக அமைந்ததுடன் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் நியமிக்கப்பட்டார் .
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதபன சந்தேகநபராக கருதப்படும் அர்ஜுன மகேந்திரன் சிங்கபூருக்கு தப்பி சென்ற நிலையில், இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்திருந்தன.
2019 செப்டம்பர் அன்று, சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம், தேவையான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டவுடன், இலங்கையிடம் இருந்து நாடு கடத்தல் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று தெளிவுபடுத்தியது.
அதே மாதத்தில் சிங்கப்பூரின் ஒப்புதலுடன், முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் மனு தாக்கல் செய்தது.
எனினும் எந்தவொரு சட்டமும் மீறப்படாததால், பத்திரப்பதிவு விவகாரத்தில் தனியான விசாரணையை கோரிய அடிப்படை உரிமைகள் வழக்குகளை தொடர இலங்கையின் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
மேலும், சர்ச்சைக்குரிய பத்திர ஏலத்தில் எந்த தவறும் இல்லை என்று மறுத்த மகேந்திரன், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க எந்த விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக உறுதிபடக் கூறினார்.
இலங்கையில் நல்லாட்சி என்ற தோற்றத்துடன் 2015 இல் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் பதவிக்கு வந்த நிலையில் இந்த நிலைமை இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினையாக மாறியது.
இப்பிரச்சினையை விசாரிப்பதற்காக பிரபல சட்டத்தரனிகள் அடங்கிய மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
குழு தயாரித்த அறிக்கையில் மகேந்திரன் இந்த ஒப்பந்தத்தில் நேரடித் தொடர்பு இல்லை என்று கூறியது.
எனினும் 2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு விக்ரமசிங்கவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜுன மகேந்திரன் பிணை முறி ஏலத்தில் தலையிட்டதாகவும், அவரது மருமகனுக்குச் சொந்தமான பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கான ரூபா இலாபம் ஈட்ட உதவுவதற்காக உள் தகவல்களை வெளியிட்டதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
மகேந்திரன் வழக்கமான நாணயக் கொள்கை கூட்டத்திற்கு வெளியே ஒரு கொள்கை விகிதத்தை உயர்த்தினார் என்றும், அதிக விலைக்கு பத்திரங்களை விற்க ஒரு கொள்வனவு குழுவிற்கு அழுத்தம் கொடுத்தாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பில் தொடர்ந்த விசாரணையில் ஜனாதிபதி ஆணைக்குழு பின்னர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பிணைமுறி மோசடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி அவரை விடுவித்தது.
எனினும், குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர அரசு முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில், முந்தைய ஆட்சியில் இந்த விவகாரம் பெரிதும் பேசப்படவில்லை என கூறி, அநுர குமார தலைமையிலான புதிய அரசு தற்போது அந்த பிரச்சினையை கையிலெடுத்துள்ளது.
தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள புதிய அரசாங்கம், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் 01.10.2024 அன்று தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியிலேயே அதிகாரிகளை இடைநிறுத்திய செயற்பாடு நடந்திருக்கலாம் என எதிர்வுகூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |