தென்னிலங்கையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் 2 பிள்ளைகளின் தாய் மரணம்
மாத்தறை, கம்புருபிட்டிய பிரதேசத்தில் தைராய்ட் சத்திர சிகிச்சைக்கு உள்ளான 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கம்புருபிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சத்திர சிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்தியரின் அலட்சியத்தாலும், வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தாலும் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
காலி யக்கலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த விக்கிரமசிங்க கிராமத்தைச் சேர்ந்த சிராணி நிமல்கா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தைராய்ட் சுரப்பி
இந்த பெண்ணின் தைராய்ட் சுரப்பியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கம்புருப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
குறித்த வைத்தியர் வழங்கிய வைத்திய ஆலோசனையின் பேரில் கடந்த 27 ஆம் திகதி தைராய்ட் சுரப்பி அறுவை சிகிச்சைக்காக கம்புருப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .
சத்திர சிகிச்சைக்கு பிறகு, மருத்துவமனையின் 10வது அறையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பெண்ணின் கழுத்து பகுதியில் வீக்கம் இருப்பதாகவும், அவரால் பேச முடியாத நிலையில் இருப்பதையும் கவனித்துக் கொள்ள அங்கு வந்த அவரது சகோதரி, ஊழியர்களிடம் தெரிவித்தார்.
சத்திர சிகிச்சை
சுமார் அரை மணி நேரம் கழித்து, ஒரு மருத்துவர் வந்து அவரை பரிசோதித்து, ஆபத்தான நிலையில் தனது சகோதரியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார் என்று இறந்த பெண்ணின் சகோதரி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் உறவினர்கள் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்தியரை சந்தித்து பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என விசாரிக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. அறுவை சிகிச்சையின் போது தவறு நடந்ததாக மருத்துவர்கள் ஒப்புக்கொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
கம்புருபிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்ததார்.
இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.