அரசாங்கமும் பௌத்த மக்களும் செய்யும் முயற்சி! சரவணபவன் குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம் முதற்கொண்டு சிங்கள மக்கள் வரை பௌத்த நாடு என உலகிற்கு அடையாளப்படுத்த விளைவதுடன் தமிழர்களை அடித்து சித்திரவதை செய்ய முடியாத சூழலினால் முக்கிய சரித்திர இடங்களை அழிக்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், புராதன சின்னங்களான வழிபாட்டு தலங்களை அட்டவணை போட்டு அழிக்கின்றார்கள். முதலில் காலினை ஊன்றி பின்னர் தாமாக விலகி இறுதியில் வேறு ஒருவரை வைத்து அழிக்கின்றனர்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடமோ அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சருக்கோ தெரிவித்தால் மீண்டும் அமைத்து தருவதாகவே கூறுவார்கள். ஆனால் குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பினையும் மீறி விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புது வரைவிலக்கணங்கள்
அரசாங்கம் முதற்கொண்டு சிங்கள மக்கள் வரை இலங்கை பௌத்த நாடு என்றே உலகிற்கு காட்ட விளைகின்றனர். ஆதிகாலம் முதலே இலங்கையில் வாழ்ந்து வருபவர்கள் தமிழர்கள் என்பதுடன் அந்த வரலாற்றினை திரிபுபடுத்துவதுடன், அழிக்கின்றனர்.
சைவ சமயத்தவர்கள் ஈமச்சடங்கு செய்யும் கன்னியா ஊற்றினையும் தற்பொழுது ஆக்கிரமித்து புது வரைவிலக்கணங்கள் கூறுகின்றனர். நெடுந்தீவிலும் சிங்களத்தில் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளிற்கு வலுச்சேர்க்கும் முகமாக விமல் வீரவன்சவும் தமிழர்களிற்கு இடமில்லையென குரலினை உயர்த்துகிறார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்திலும் மற்றும் ஜெயவர்த்தனாவும் இவ்வாறு முன்னர் கூறியிருந்தனர்.
வரலாற்று தொல்லியல் திணைக்களம்
தற்பொழுது, மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் முன்னிற்பதால் தமிழர்களிற்கு அடிக்க முடியாதென்பதால், வழிபாட்டு தளங்களுடன் சரித்திர ரீதியான இடங்களை அழிப்பதுடன் அங்கு புத்தர் சிலையினையோ அல்லது விகாரையினையோ அமைத்து விட்டு வரலாற்று தொல்லியல் திணைக்களமும் கதை கூறுகிறது.
ஆகவே இவ்வாறான செயற்பாடுகளால் எதிர்கால சந்ததியிற்கு தெளிவில்லாத வரலாற்றையே சென்றடைகின்றது. அன்று நாம் தோற்பதற்கு உதவி புரிந்தோர், நாம் இந்த நாட்டில் உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வோம் என்று கூறினார்கள்.
அது
இப்பொழுது எங்கு சென்று விட்டதென உதவி செய்த நாடுகளை கேட்டுக்கொள்கின்றேன்
எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





வயலில் கிடைத்த வைரக்கல்லால் ஒரே நாளில் வாழ்க்கை மாற்றம்.., பெண் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
