வெடுக்குநாறி மலை விக்கிரகங்கள் உடைப்பு: போராட்டத்திற்கு அழைப்பு
வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து வீசப்பட்டமைக்கு எதிராக பலரும் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
ஆலயத்தின் நிர்வாகத்தினர்
வவுனியா வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆலயத்தின் நிர்வாகத்தினரால் வவுனியாவில் நாளை (30.03.2023) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தினை திசை திருப்பும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் பொய்யான பரப்புரைகளை சில விசமிகள் முன்னெடுத்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்களால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆலயத்தில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பாக ஜனாதிபதியால் தீர்வொன்று வழங்கப்பட்டுள்ளது.
எனவே நாளையதினம் இடம்பெறவிருந்த போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்றவகையில் பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை உரிமை கோரியே குறித்த போலிப்பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த விடயத்தை முற்றாக மறுத்துள்ள ஆலயத்தின் நிர்வாகத்தினர் நாளையதினம் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளனர்.
நாளைய ஆர்ப்பாட்ட பேரணி காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடையவுள்ளது.
எனவே பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமய பெரியோர்கள், பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்புக்களும் பேதங்களை மறந்து குறித்த பேரணியில், கலந்து கொண்டு மத ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கையினை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சிவில் சமூக அமையம்
நாளை (30.03.2023) வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம் என தமிழ் சிவில் சமூக அமையம் கோரியுள்ளது.
இது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறிக்கையிலேய இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் தெய்வச்சிலைகளும் அடையாளந்தெரியாதவர்களென வழமை போன்று கூறப்படும் இனஅழிப்பாளர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளமை (26.03.2023) அன்று தெரியவந்துள்ளது.
தமிழர் தாயகத்தில் தமிழ், அல்லது அவர்களது அடையாளங்களுள் ஒன்றான சைவ அடையாளங்கள் நிராகரிக்கப்பட்டு பௌத்த அடையாளத்திற்குரியது என ஆக்கிரமிக்கப்படுவதும் அவை சிங்கள பௌத்தர்களின் அடையாளம், அவர்களின் வரலாற்று வாழிடம் என்ற புனைவை உருவாக்கும் இலங்கையின் பௌத்த மதத்திற்குரிய வகையில் வரலாற்றுத் திருத்தல்களைக் காலங்காலமாகச் செய்து வரும் தொல்லியல் திணைக்களத்தால் சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டுள்ள பல நூறு தமிழ் தொன்மை மரபு அடையாளச் சின்னங்கள் நிறைந்த இடங்களில் வெடுக்குநாறி மலையும் ஒன்று.
வெடுக்குநாறி மலையை இலங்கையின் தொல்லியல் திணைக்களம் வழமை போன்று வரலாற்றுப் புரட்டுகளாலும், படை வலிமையாலும் நீதித்துறை மற்றும் தொல்லியல் துறையின் ஆதரவுடனும் ஆலய பரிபாலன சபையினரை வெளியேற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில் இந்த அநியாயம் நடைபெற்றுள்ளது.
இனவாதத்தால் தானே வரவழைத்துக்கொண்ட பொருளாதாரப் பேரழிவின் மூலம் உலகையே தன்னை உற்றுப்பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது இலங்கை.
அத்துடன் இலங்கை அரசு தனது அன்றாட செயற்பாடுகளுக்கே நிதியின்றித் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது.
இத்தகைய நிலையிலும் கூடத் தமிழினத்தின் மீதான இனவழிப்பையும் தமிழர் பிரதேசங்களைப் பௌத்த மயமாக்கும் வேலைத் திட்டத்திட்டத்தையும் எந்த விதத்திலும் இலங்கை அரசு தளர்த்தத் தயாரில்லை என்பதையே இந்த சிலையுடைப்பு தமிழ் மக்கள் மத்தியில் நிரூபித்து நிற்கின்றது.
பிச்சையெடுத்தேனும் இனஅழிப்பைத் தொடர்வோம் என சிங்கள பௌத்த தேசம் கங்கணம் கட்டி நிற்கின்றது.
அதேவேளை வழமைபோன்று உலகமும் அண்டை நாடுகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இவ்வாறான அழிப்புகளுக்கு எந்த எதிர் வினையுமின்றி செயலற்று இருக்கின்றன.
இந்த நிலையில் நாளை (30.03.23) அன்று வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்புக்கு எதிராக வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளனர்.
தமிழ் சிவில் சமூக அமையம் இந்த அழிப்புக்கு எதிராக
பங்களிப்பையும் வழங்குவதுடன் தமிழ் மக்களையும் பரந்த அளவில்
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாலய அழிப்புக்கும், தொடரும் இனவழிப்பு
நடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்
என்றும் வேண்டி நிற்கின்றது.