அரச மருத்துவமனைகளில் பழுதடைந்துள்ள சி.டி. ஸ்கேனர்கள்:பாதிப்படையும் பொதுமக்கள்
அரச மருத்துவமனைகளில்10ற்கும் மேற்பட்ட சி .டி. ஸ்கேனர்கள் பழுதடைந்துள்ளதால் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு நேற்றையதினம்(26.07.2023) வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவு, பதுளை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கராப்பிட்டிய, ஹொரணை, களுத்துறை, கொழும்பு தேசிய பல் வைத்தியசாலை, இரத்தினபுரி, பேராதனை சிறிமாவோ சிறுவர் வைத்தியசாலை போன்றவற்றின் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
சுகாதார அமைச்சு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் ஒரு வருடமாக சி.டி. ஸ்கேனர் செயற்படாமல் உள்ளது.
நாடு முழுவதும் 44 சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் 10 இயந்திரங்கள் செயலிழந்துள்ளதோடு 34 இயந்திரங்கள் தற்போது இயங்கி வருகின்றன.
குறிப்பாக இரத்தினபுரி வைத்தியசாலையில் இந்த இயந்திரம் பழுதடைந்தமையினால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் அம்புலன்ஸ் சேவைகள் மூலம் சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதுடன், இவ்வாறான செயற்பாடுகளினால் சுகாதார அமைச்சு போக்குவரத்துக்காக அதிகப் பணத்தைச் செலவிட வேண்டியுள்ளதுடன், சி.டி. ஸ்கேனர்களை மீட்டெடுப்பதன் மூலம் தேவையின்றி செலவாகும் பணம் சேமிக்கப்படும்.
மேலும், உடலில் இரத்தக்கசிவு ஏற்படுவதைக் கண்டறிவதற்கும், மூளை மற்றும் மண்டை ஓடு தொடர்பான நோய்களைக் கண்டறிவதற்கும், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களைக் கண்டறிவதற்கும், இரத்த நாளங்களில் அடைப்புகளைக் கண்டறிவதற்கும், கண் வெடிப்புகளின் 3டி மற்றும் 2டி படங்களைப் பெறுவதற்கும், பக்கவாத நோயாளிகளுக்கு 4 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கவும் சி.டி ஸ்கேன் பயன்படுகிறது." என அவர் தெரிவித்துள்ளார்.