தலிபான்களின் உறுதிமொழிகள் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள இலங்கை
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களின் உறுதிமொழிகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிகளில் ஈடுபட முடியும் எனவும், பெண் பிள்ளைகள் பாடசாலைகள் செல்ல முடியும் எனவும் தலிபான்கள் உறுதிமொழி வழங்கியமை மகிழ்ச்சி அளிக்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமன்னிப்பு அறிவிப்பு மற்றும் வெளிநாட்டவர்களை துன்புறுத்துவதில்லை என அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை முதன்மையான கரிசனையை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.