அரச ஊழியர்களுக்காக மாதாந்தம் செலவிடப்படும் பில்லியன் தொகை பணம்! வெளியான தகவல்
இலங்கையில் சுமார் 15 இலட்சம் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 93 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவழிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்போது மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அடுத்த வருடம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,, மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் அரச பணியில் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான பரிந்துரைகளை வழங்க இரண்டு தனித்தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத்துறை ஆட்சேர்ப்புச்செலவு
இதேவேளை, பொதுத்துறை ஆட்சேர்ப்புச் செலவு அதிகம் என்பதால், அரச பணிக்கான புதிய ஆட்சேர்ப்புகளை நிறுத்த சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் முடிவு செய்திருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரசத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 65ல் இருந்து 60 ஆக குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இது மருத்துவ தொழில் உட்பட சில முக்கியமான துறைகளில் பணியாற்ற ஆட்கள் இல்லாததால் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வூதிய வயதைக் குறைப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பொதுத் துறையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் எனவும், ஓய்வு பெறுவதால் மருத்துவத்துறை மட்டுமின்றி நிர்வாகத்துறையும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.