அரசியலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான்! ரஞ்சனுடன் இணைவு
நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனநாயகக் குரல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சி கொழும்பில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடவுள்ள டில்ஷான்
கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க செயற்படுவதோடு, தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கட்சியானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மைக் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.
கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் திலகரத்ன தில்ஷான் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது
அத்துடன், மேலும் பல பிரபலங்கள் கட்சிக்குள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது. ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாம், சில நிபுணர்களை சந்தித்து குடிமை உரிமைகளை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரஞ்சன், குடியுரிமை வழங்கப்பட்டால் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் அட்டை தமக்கு வழங்கப்பட்டது, ஆனால் தாம், வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால் வாக்களிக்க முடியவில்லை.
இந்த சூழ்நிலையில், தாம் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையகத்திடம் விசாரிக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆணையகம் பச்சைக்கொடி காட்டினால் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார்.
அத்துடன் சில கட்சிகள் தன்னை தேர்தலில் போட்டியிட அழைத்துள்ளன, இந்த அழைப்புகள் அனைத்தையும் பரிசீலிக்கவுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக கடூழிய சிறைத்தண்டனையை பெற்ற ரஞ்சன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், சிவில் உரிமைகள் தொடர்பான, நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.
you may like this