வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான வீடு விற்பனை ஆரம்பம்
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வியத்புர வீடமைப்புத் தொகுதியிலிருந்து நேற்று குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
டொலர் வருவாய்
குறித்த வீட்டிற்காக அவர் 40,000 டொலர்களை செலுத்தியதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
டொலரில் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்துள்ளது.
குறைந்த விலையில் புதிய வீடு
டுபாயில் பணிபுரியும் குறித்த இலங்கையர் கொள்வனவு செய்த 02 அறைகள் கொண்ட வீட்டின் பெறுமதி 158 லட்சம் ரூபாய் பெறுமதியானதுடன் வழங்கப்பட்ட 10 வீத தள்ளுபடிக்கமைய, 142 லட்சம் ரூபாய்க்கு வீட்டை கொள்வனவு செய்துள்ளார்.
பல இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் வீடுகளை வாங்க விண்ணப்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் 275,000 டொலர்களை ஈட்டுவதே தமது இலக்கு என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.