இலங்கை கால்பந்து அணி வீரருக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பில் விளக்கம்
கடந்த ஜூன் 10 அன்று சீன தைபே அணிக்கு எதிரான போட்டியை இலங்கை வென்றதன் பின்னர், " சுதந்திர பாலஸ்தீனத்துக்காக பிரார்த்தனை செய்வோம்" என்ற செய்தியைக் காட்டியதற்காக, தேசிய கால்பந்து அணி வீரர் மொகமட் தில்ஹாமுக்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்தமை தொடர்பில் இலங்கை கால்பந்து கூட்டமைப்பு (FFSL) தெளிவுபடுத்தியுள்ளது.
தில்ஹாம் பயன்படுத்தப்படாத மாற்று வீரராக இருந்தபோதிலும், போட்டிக்குப் பின்னரான கொண்டாட்டங்களின் போது அவர் தனது ஆடையில் குறித்த செய்தியை வெளியிட்டார்.
வீரருக்கு அபராதம்
இது அரசியல் அல்லது சர்ச்சைக்குரிய செய்திகளைத் தடைசெய்யும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் உபகரண விதிமுறையை மீறியமையாகும்.
இந்த அபராதம் போட்டி விதிகளை மீறியதற்காகவே தவிர செய்தியின் உள்ளடக்கத்துக்கானது அல்ல என இலங்கை கால்பந்து கூட்டமைப்பு வலியுறுத்தியது.
அத்துடன் குறித்த வீரருக்கு அபராதம் செலுத்த ஒரு மாதம் அவகாசம் உள்ளது.
எனவே அபராத விதிப்பு தொடர்பான தவறான தகவல்களுக்கு எதிராக கூட்டமைப்பு எச்சரித்ததுடன் நடுநிலைமை மற்றும் விளையாட்டின் ஒருமைப்பாட்டிற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.



