நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைவு! அரசின் செயற்பாடுகளைக் கடுமையாகச் சாடிய சுரேன் ராகவன்
நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்றும், அரசின் செயற்பாடுகள் கவலைக்குரியதாக உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சுரேன் ராகவன் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(28.10.2026)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், லீசிங் வசதிகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான கடன் வட்டி விகிதங்கள் இன்னமும் அதிகமாகவே வசூலிக்கப்படுகின்றன.
நாட்டின் பொருளாதாரம்
நாட்டின் பொருளாதாரம் இவ்வாறானதொரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போதே, அமர்ந்து செல்வதற்கான வாகனங்கள் பழுதடைந்துள்ளதால் 1,750 புதிய வாகனங்களைக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி மூன்று முறை வலியுறுத்திக் கூறியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல்போன 23 கொள்கலன்கள் குறித்துக் கண்டறிவதற்கு இன்னும் மூன்று மாத கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், வரவிருக்கும் மூன்று போயா தினங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் என்பதைத் தாங்கள் நன்கறிந்திருந்த போதிலும், அவர்கள் மீது எவ்வித கோபமும் கொள்ளவில்லை எனவும் சுரேன் ராகவன் கூறினார்.
வாக்குறுதி
அரசின் 'சட்டத்தின் ஆட்சி' குறித்த வாக்குறுதியை விமர்சித்த அவர், அனைவருக்கும் சட்டம் சமமானது என்று ஜனாதிபதியால் இனிமேலும் கூற முடியாது எனவும் தெரிவித்தார்.
அரசால் முன்மொழியப்பட்டுள்ள 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்', இந்நாட்டின் வரலாற்றில் உருவாக்கப்படவுள்ள மிகவும் ஆபத்தான மற்றும் ஜனநாயக விரோதமான சட்டமாக மாறவுள்ளது எனவும் அவர் எச்சரித்தார்.

அத்துடன், நாட்டின் நிலக்கரி இருப்புக்கள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் 750 பௌத்த பிக்குகளைச் சந்தித்து அவர்களின் வாழ்வியல் முறைமைகள் குறித்துக் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையைப் பொறுத்தவரையில் பிக்குகள், சாசனம் மற்றும் அரசு ஆகிய மூன்றும் தனித்தனியானவை அல்ல என்றும், அவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட ஒரே அங்கமாகும் எனவும் மேலும் தெரிவித்தார்.
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam