பொலிஸார் சட்டத்தை மீறினால் நடவடிக்கை : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் பொலிஸாருக்கு உண்டு என்றும், சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் பொலிஸார் செயற்பட முடியாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சட்டத்துக்கு முரணாகப் பொலிஸார் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(27.10.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிடம் முறையிட
இதன்போது மேலும் தெரிவித்ததாவது. "ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவத்தில் பொலிஸார் சட்டத்துக்கு முரணாகச் செயற்பட்டிருக்கின்றமை விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டத்துக்கு முரணாகச் செயற்படும் அதிகாரம் பொலிஸாருக்கு எப்போதுமே கிடையாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், "கடந்த இரண்டு ஆண்டுகாலப் பகுதியில் சட்டவிரோதமான முறையிலும் ஒழுக்கீனமாகவும் செயற்பட்ட 720 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
பொலிஸார் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டாலோ அல்லது அநீதி இழைத்தாலோ, பொதுமக்கள் அது குறித்து நேரடியாகப் பொலிஸ்மா அதிபரிடமோ அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடமோ முறையிட முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்.