ரணில் விக்ரமசிங்க மகிந்த ஆட்சியினுடைய நிழல் ஆட்சியினை செய்து கொண்டிருக்கிறாரா!: ஜேசுதாசன்
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகிந்த ஆட்சியினுடைய நிழல் ஆட்சியினை செய்து கொண்டிருக்கிறாரா என தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் ஜேசுதாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதனை விடுத்து, ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்களை கைது செய்வதனை கைவிட வேண்டும்.
இளைஞர்கள் போராடி ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து செயற்பட்டு கொடுங்கோல் ஆட்சியை மாற்றி புதிய ஜனாதிபதிக்கான மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.
மகிந்தவின் நிழல் ஆட்சி
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகிந்த ஆட்சியினுடைய நிழல் ஆட்சியினை செய்து கொண்டிருக்கிறாரா? என்ற கேள்வி காணப்படுகின்றது.
ஜனநாயகம் தொடர்பில் பேசப்படும் போது போராட்டக்காரர்களை கைது செய்தல் செயற்பாடு தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.
அனைவரும் எதிர்பார்த்தார்கள் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தபோது பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்படும் என்று, ஆனால் அவ்வாறு இடம் பெறவில்லை.
மக்கள் மீண்டும் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள்
வடமாகாண கடற்தொழிலாளர் இணையமும், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து குறிப்பாக கடற்றொழிலாளர்களை பாதிக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஊடகம் வாயிலாக ஆட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக கடற்றொழிலாளர் சமூகங்களின் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக கலந்துரையாடி இருக்கின்றோம்.
கடந்த 30 வருட காலமாக யுத்தத்தின் காரணமாக கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே சுவடுகளை அதே துன்பங்களை சுமந்தவர்களாக தொடர்ச்சியாக வடக்கு கடற்றொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அத்தோடு இந்திய இழுவைமடி பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வடக்கு கடற்றொழிலாளர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் புதிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.