மூவாயிரம் ரூபாவுக்கு விற்பனையான பெட்ரோல்: மாறிவரும் இலங்கையின் நிலை
நாடு முந்தைய நிலையில் இருந்து உயர்ந்துள்ளது. ஒரு லீட்டர் பெட்ரோல் 3,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட காலம் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத காலம் ஒன்று இருந்தது. இப்போது நாடு மெல்ல மெல்ல பொருளாதார ரீதியாக நிலையான நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கோட்டாபய செய்த தியாகம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த 3 வருடங்கள் நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டோம். கோட்டாபய ராஜபக்ச வந்து இந்த நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற பெரும் தியாகம் செய்தார். அதனால் அவர் பதவி இழந்தார்.
ஒரு கட்சியாக நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி பதவி விலகினார், பிரதமர் பதவி விலகினார், அமைச்சரவையில் இருந்து நாங்களும் விலகினோம்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கக்கூடிய ஒருவரை வந்து பொறுப்பேற்க அழைத்தோம். நிபந்தனையின்றி நாங்கள் உதவுவோம் என்று கூறினோம். ஆனால் அப்போது யாரும் முன்வரவில்லை.
ரணிலுக்கு ஆதரவு
நாடு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அப்போதுதான் ரணில் விக்ரமசிங்க வந்து நாட்டைப் பொறுப்பேற்றார்.
தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு இழுத்தடிக்காமல் உதவுங்கள் என்றார். அதனால்தான் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் சில ஆணைகள் தயக்கத்துடன் நிறைவேற்றப்பட்டன. அந்த முடிவுகள் நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்டவை. நாங்கள் எதுக்கும் இடைஞ்சலாக இருக்கவில்லை. அவருக்கு உதவினோம்.
இன்று திரும்பிப் பார்க்கும்போது, நாடு முந்தைய நிலையில் இருந்து உயர்ந்துள்ளது. ஒரு லீட்டர் பெட்ரோல் 3,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட காலம் இருந்தது என்பதை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.
அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத காலம் ஒன்று இருந்தது. இப்போது நாடு மெல்ல மெல்ல பொருளாதார ரீதியாக நிலையான நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
எனவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவரே இந்த நேரத்தில் நாட்டுக்கு தேவை என்று நான் நினைக்கிறேன். எனவேதான் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |