அத்தியாவசிய மருந்தில் நடந்த பாரிய மோசடி: குற்றவாளிகள் அமைச்சரவைக்குள்
வங்குரோத்தான நாட்டில் தற்போதைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்தவர், இம்யூனோகுளோபின் என்ற அத்தியாவசிய மருந்தில் பல்வேறு கலவைகளை கலந்து தரம் குறைந்த, தரமற்ற மருந்துகளை மக்களுக்கு வழங்கியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அமைச்சரும் அதிகாரிகளும் எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி மோசடி, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுக்கு தரக்குறைவான மருந்துகளை வழங்கியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அம்பலாங்கொட பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மருந்து மோசடி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வேறு பல மருந்துப் பாவனைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் தரக்குறைவான மருந்தினால் கண்பார்வை இழந்தவர்கள் அதிகளவானோர் உள்ளனர்.
வங்குரோத்தால் கடனை செலுத்த முடியாமல், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மூழ்கியுள்ள நாட்டில் மருந்துப் பொருட்களைத் திருடுவது பெரும் குற்றச் செயல்.
மருந்துப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு கூறப்படும் போது, ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்புக்கள் இருந்ததால் சமூகமளிக்க முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தும், அந்நபர் அது போன்ற கூட்டங்களில் கூட கலந்து கொள்ளவில்லை.
இந்நபர்கள் நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளனர். இவ்வாறு பல தவறுகளை செய்தவர்கள் இன்றும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த தரக்குறைவான மருந்து மோசடிக்கு சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மட்டுமன்றி சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் சார்பாக கைகளை உயர்த்திய 113 பேரும் பொறுப்புக் கூற வேண்டும்.
இத்தைகைய நபர்கள் அமைச்சரவையில் இருக்கும் போது சுகாதாரத்துறையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |