இலங்கைக்காக சர்வதேசத்திடம் சங்கக்கார முன்வைத்துள்ள உருக்கமான வேண்டுகோள்
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார்.
பிரமிக்க வைக்கும் இலங்கை தீவு
இது குறித்து தனது முகப்புத்தக தளத்தில் பதிவொன்றினை அவர் இட்டுள்ளார்.
உள்ளூர் புகைப்படக் கலைஞர் பிரதீப் கமகேயினால் பிடிக்கப்பட்ட இலங்கையின் இயற்கை காட்சிகளை தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்ட குமார் சங்கக்கார, “நிச்சயமாக பிரமிக்க வைக்கிறது!! எங்கள் தீவு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது” என கூறியுள்ளார்.
குறித்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ள குமார் சங்கக்கார, இலங்கை மீண்டும் விருந்தினர்களுக்கான திறக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்வதேசத்திடம் ஆதரவு கோரும் சங்கக்கார
தனது முகப்புத்தக பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள குமர் சங்கக்கார, எங்கள் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து நண்பர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை.
இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால், நமது மக்களின் துணிச்சலான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு நன்றி, இங்கு சில சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் பயண ஆலோசனைகளை தளர்த்துவதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையை நம்பிக்கையுடன் மீண்டும் இங்கு கழிக்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக, தேவையற்ற செய்திகள் நல்ல செய்திகளை விட வேகமாக பரவுகின்றன. எனவே தயவுசெய்து இதனை பகிரவும், என்று சங்கக்கார பதிவிட்டுள்ளார்.