மகிந்தவுக்காக வந்து சவப்பெட்டி வாகனத்தில் சென்ற அரசியல்வாதிகள்
கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க அலரி மாளிக்கைக்கு வந்தவர்கள் சவப்பெட்டிகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியமையினால் வன்முறையாக மாறியது. இந்த நிலையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு வந்த சிலரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் பேரே ஏரியில் தள்ளிவிட்ட காட்சிகள் வெளியாகியிருந்தது.
இவர்களில் கம்பஹா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட நால்வர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு பேரே ஏரியில் வீசப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
பேரே ஏரியில் நீண்ட நேரம் இருந்த நால்வரும் கரைக்கு வந்து மூன்று நாட்களாக மறைந்திருந்துள்ளனர். சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளுக்கு இறுதி ஊர்வலத்திற்கு வரும் வாகனத்தில் சென்றுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் சவப்பெட்டி கடை நடத்தும் தனது நண்பருக்கு கைத்தொலைபேசியில் அழைப்பு விடுத்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், பாதுகாப்பாக வீடு செல்ல இறுதி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் வாகனம் ஒன்றைத் தருமாறு கோரியுள்ளார். அதற்கமைய குறித்த நான்கு பேரும் அவர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
நால்வரும் மாலையில் கொழும்பில் இருந்து இறுதி ஊர்வல வாகனத்தில் படுத்தபடியே தமது இறுதி வீடுகளுக்கு சென்றடைந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென இறுதி ஊர்வல வாகனம் வந்தமையினால் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதுடன், மூன்று உறுப்பினர்களும் மற்றைய நபரும் இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து இறங்கியதை அயலவர்கள் பார்த்துள்ளனர். எனினும் அதனை இரகசியமாக வைத்துக் கொள்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.