கோழி இறைச்சியின் விலை உயர்வு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
கோழி இறைச்சியின் விலை உயர்வு எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பெரிய அளவில் உயர்விருக்காது என்று அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தையில் தற்போது கோழி இறைச்சியின் கையிருப்பு அதிகமாக இருப்பதால், இறைச்சியின் விலையில் பாரிய உயர்வுக்கு சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
டிசம்பர் பண்டிகைக் காலத்தில், கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், உறைநிலைப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. இதனால் விலையில் மாற்றங்கள் பெரிய அளவில் ஏற்டாது.
இதேவேளை, தற்போது சந்தையில் முட்டையின் விலை உயர்ந்துள்ளமைக்கு, தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி சரிவு ஆகியவையே காரணம்.

மேலும், விலங்குகளுக்கான தீவனத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோளத்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதால், அதற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முட்டை உற்பத்தில் ஒரு குறிப்பிட்ட சரிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன், கோழிப்பண்ணைகளில் பரவிய சில வைரஸ் நோய்களும் முட்டை உற்பத்தி குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளன.
தற்போது சந்தையில், ஒரு முட்டை 39 ரூபா முதல் 40 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. முட்டை உற்பத்தியை குறுகிய காலத்தில் கணிசமாக அதிகரிப்பது கடினம் என்பதால், எதிர்காலத்தில் முட்டையின் விலை, சந்தையின் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்தே அமையும் என குறிப்பிட்டுள்ளார்.