ஜனாதிபதியின் இல்லத்திற்கு தீவைத்த சம்பவம்! ஐ.ம.ச முன்னாள் உறுப்பினர் கைது- நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கோட்டை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சந்திம நயனஜித்தை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மஜிஸ்திரேட் நீதவான் திலின கமகே அவரை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களம்
சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
சந்தேகநபர் மேற்படி தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ள தினத்தில் குறித்த இடத்திற்கு 100 பேரைக் கொண்டு சென்றதாக குறிப்பிடப்படும் குரல் பதிவு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அதனையடுத்தே எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூலை 9ஆம் திகதி இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது கொள்ளுப் பிட்டியில் உள்ள ஜனாதிபதியின் பிரத்தியேக வாசஸ்தலத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மேற்படி நபரை குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட தகவல்
அவர் தொடர்பில் கிடைத்த தகவல்களுக்கு அமைய நேற்றைய தினம் சந்தேக நபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ வைப்பதற்கான சூழ்ச்சிகளை
மேற்கொண்டமை, நிதி மற்றும் உதவிகளை வழங்கியமை, ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்குள் அத்துமீறி
பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம்
ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்
சாட்டுகளின் பேரிலேயே அவரை
கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.