பொலிஸாரின் பல கேள்விகளுக்கு பதிலளிக்காத வசந்த முதலிகே-சட்டத்தரணி நுவன் போபகே
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தங்காலையில் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, பொலிஸார் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் சகல கேள்விகளுக்கும் நீதிமன்றத்தில் மாத்திரம் பதிலளிக்க தீர்மானித்துள்ளதாகவும் சட்டத்தரணி நுவன் போபகே நேற்று தெரிவித்துள்ளார்.
முதலில் ஆலயம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே உட்பட மூவர்
வசந்த முதலிகே, கல்வல சிறிதம்ம தேரர், ஹஷான் ஜீவந்த குணதில்கக ஆகிய பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களின் நலன் அறிய தங்காலை தடுப்பு நிலையத்திற்கு நேற்று சென்றிருந்த போது வசந்த முதலிகே இதனை கூறியதாக போபகே தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகேவை மாத்திரம் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. ஏனைய இருவரும் தடுப்பு நிலையத்திற்கு வெளியில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
கடந்த சில மாதங்களில் காலிமுகத்திடல் உட்பட நாடு முழுவதும் மக்கள் நடத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் காரணம் என்ற நிலைப்பாட்டில் அந்த திரைக்கதைக்கு அமைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வசந்த முதலிகே கூறினார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏப்ரல் 8 ஆம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டம், மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு எதிரில் நடத்திய நடத்திய ஆர்ப்பாட்டம், நாடாளுமன்றத்திற்கு அருகில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், உலக வர்த்தக மையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், ஜூலை 9 ஆம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டம் என்பன காரணமாக காலிமுகத்திடல் போராட்டத்திற்கு மக்கள் ஒன்று சேர்ந்தனர் என்ற நிலைப்பாட்டில் பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.
கொழும்பில் கடந்த 18 ஆம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உட்பட மூன்று பேர் முதலில் நவகமுவ ஆலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வசந்த முதலிகே உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவர்களை எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உத்தரவு கிடைக்கும் வரை இவர்கள் நவகமுவ ஆலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வசந்த முதலிகேவுக்கு உடல் ரீதியான துன்புறுத்தல்கள் எதுவும் மேற்காள்ளப்படவில்லை என்ற போதிலும் அவர் உள ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பல காலங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடம் ஒன்றில் வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு பாய் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் நுவன் போபகே கூறியுள்ளார்.