நுகேகொடை பேரணி! விசேட போக்குவரத்துக் கட்டுப்பாடு..
நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று(21) நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான கூட்டம் காரணமாக விசேட போக்குவரத்துக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த விசேட போக்குவரத்துக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, பிற்பகல் 2 மணி முதல் பொதுக் கூட்டம் முடிவடையும் வரை நுகேகொடை மேம்பாலத்துக்கு அருகில் உள்ள ஹை லெவல் சந்தியில் இருந்து நாவல சுற்றுவட்டம் வரையான நாவல வீதியில் போக்குவரத்துக் கட்டுப்படுத்தப்படும்.
மாற்றுப் பாதைகள்
கொழும்பு மற்றும் கொஹுவலையில் இருந்து நுகேகொடை வழியாக நாவல அல்லது பிட்ட கோட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள், ஹை லெவல் வீதியில் உள்ள கம்சபா சந்தியில் இடதுபுறம் திரும்பி, கட்டிய சந்தி ஊடாக மிரிஹான மற்றும் நாவல பகுதிகளை அடையலாம்.

புறக்கோட்டை மற்றும் நாவல பகுதியில் இருந்து நாவல சுற்றுவட்டம் வழியாக நுகேகொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள் கட்டிய சந்தியில் இருந்து கம்சபா சந்தி வரையோ, அல்லது தெல்கந்தை சந்தியில் இருந்து ஹை லெவல் வீதி வரையோ பயணிக்கலாம்.
மஹரகமவில் இருந்து ஹை லெவல் வீதி வழியாக நுகேகொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள், கம்சபா சந்தியில் வலதுபுறம் திரும்பி, கட்டிய சந்தி ஊடாகப் பயணிக்கலாம்.