ஈரானில் பதற்றம்: இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்
ஈரானில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியப் பிரஜைகள் அனைவரும் உடனடியாகக் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அவசர ஆலோசனையை வழங்கியுள்ளது.
ஈரானில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வர்த்தக ரீதியிலான விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து சாதனங்கள் மூலம் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஈரானில் பதற்றம்
அத்துடன் ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் (PIOs) போராட்டங்கள் நடைபெறும் இடங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டு (Passport) மற்றும் அடையாள அட்டைகள் உள்ளிட்ட குடிவரவு ஆவணங்களை எப்போதும் கையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஈரானில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாணவர்கள் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அறிவுறுத்தல்
பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான ஈரானின் மோதல் போக்கு அதிகரித்துள்ளமையும் இந்த எச்சரிக்கைக்கு ஒரு காரணமாகும். ஈரானில் உள்ள இந்தியர்கள் இன்னும் தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில், உடனடியாக https://www.meaers.com/request/home என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.
ஈரானில் இணையத் தடங்கல் இருந்தால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் இதனை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.