பலஸ்தீன ஊடகங்களை ‘தீவிரவாத அமைப்புகள்’ என அறிவித்த இஸ்ரேல்
பலஸ்தீனத்தின் ஐந்து உள்ளூர் இணைய ஊடகங்களை “தீவிரவாத அமைப்புகள்” என வகைப்படுத்தும் இராணுவ உத்தரவை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கார்ட்ஸ் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த உத்தரவு அல் அஸிமா நியுஸ் Al Asima News, குவாட் பிளஸ் Quds Plus, அல்குவாட்ஸ் அல்பாவ்சாலா Alquds Albawsala, மாராஜ் Maraj மற்றும் மேய்டான் அல்குவாட்ஸ் Maydan Alquds ஆகிய தளங்களை இலக்கு வைத்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடகங்கள் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையவை எனவும், குறிப்பாக ஜெருசலேம் பகுதியில் அமைதியின்மையைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றன எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் நகரில் என்ன நடைபெறுகிறது என்பதை நிமிடத்திற்கு நிமிடம் பலஸ்தீனர்களுக்கு தெரிவித்து வந்த முக்கிய தகவல் ஆதாரங்களே இவ்வூடகங்கள் என சர்வதேச ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்குக் கரை பகுதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகள் மற்றும் கதவுகள் மூலம் பிரிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு ஜெருசலேமுக்குள் நுழைவு பெரும்பாலான பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் அனுமதியின்றி சாத்தியமற்றதாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதிலும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 அக்டோபரில் காசா மீது தொடங்கிய போருக்கு பின்னர், பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ தலைமையிலான இஸ்ரேல் அரசு, பலஸ்தீன பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போரின் தொடக்கம் முதல் காசாவில் சுமார் 300 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.