கந்தளாய் - கண்டி பிரதான வீதியில் விசேட திடீர் வீதிச் சோதனை முன்னெடுப்பு
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிப்போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கண்டறியும் வகையில், கந்தளாய் தலைமையகப் பொலிஸ் அதிகாரிகளால் விசேட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையொன்று நேற்று இரவு (26) முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் - கண்டி பிரதான வீதியின் வெலிங்கடன் சந்தியில் இடம்பெற்ற இச்சோதனை நடவடிக்கை, சுமார் மூன்று மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
முறையான பரிசோதனை
இச்சோதனையின் போது, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களைச் செலுத்தியவர்கள், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள், எதிர்வரும் வாகனங்களுக்கும் ஏனைய வீதிப் பயனாளர்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அதிதீவிர வெளிச்சம் கொண்ட விளக்குகளை பொருத்தி வாகனங்களைச் செலுத்தியவர்கள் முறையாகப் பரிசோதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்பட்ட பலருக்கு எதிராக வீதிப்போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதேசத்தில் வீதி விபத்துகளைக் குறைக்கவும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

