துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதிப்பதத்திரங்கள் புதுப்பிப்பது தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்பிரகாரம், தங்களது துப்பாக்கிகளைப் புதுப்பித்துள்ள அனைத்து அனுமதிப்பத்திர உரிமையாளர்களும், வைத்திருப்பவர்களும், அனுமதி பெற்ற நாளிலிருந்து அரை வருடத்திற்குப் பிறகு துப்பாக்கியை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து, சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதன்போது துப்பாக்கியின் செயல்பாடு பரீட்சிக்கப்பட்டு, மற்றும் அதன் தொடரிலக்கம் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பொருந்துகின்றதா என்பதை சோதித்த பின்னர், பொலிஸார் சான்றிதழ் ஒன்றை வழங்கவுள்ளனர்.
விசேட அறிவிப்பு
இனிமேல், மேற்குறிப்பிட்டுள்ளவாறு, ஒவ்வொரு அரை வருடத்திற்கும் ஒருமுறை தனிப்பட்ட துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் துப்பாக்கிகள் மற்றும் அனுமதிப் பத்திரங்களைப் பரிசோதித்து, அதற்கான சான்றிதழை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட ஆண்டிற்கான தங்களது தனிப்பட்ட துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்துள்ள அனைத்து நபர்களும், 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்று அரை வருடம் கழிந்த பிறகு, தங்கள் வசமுள்ள துப்பாக்கியை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து, அதன் செயல்பாடு மற்றும் தொடரிலக்கம் ஆகியவற்றை பரீட்சித்து அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.