அநுரவுக்கு நாமல் விடுத்துள்ள பகிரங்க சவால்
தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.
அத்தோடு, அரசின் பலவீனமான நிர்வாகத்தின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று(1.6.2026) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சவால்
அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசை அசைக்க முடியுமா, முடியாதா என்பதை அறிய வேண்டுமாயின் தேர்தலை நடத்த வேண்டும்.
தைரியமிருந்தால் தேர்தலை நடத்துங்கள், இந்த அரசை நாம் அசைத்துக் காட்டுகின்றோம் என ஜனாதிபதிக்குச் சவால் விடுக்கின்றேன்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வர இடமளிக்கக் கூடாது என்ற குறுகிய மனநிலையில் இருந்துகொண்டே தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது.
மாகாண சபைத் தேர்தல்
கடந்த கால அரசுகள் அவ்வாறு செயற்பட்டிருந்தால், மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. எனவே, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்துகின்றோம்.

தோல்வியடைந்து விடுவோம் என்பதற்காகத் தேர்தலை நடத்தாமல் இருக்கக் கூடாது. கடந்த நல்லாட்சி அரசு 2017ஆம் ஆண்டு தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், மாகாண சபைத் தேர்தல் முறைமையை நெருக்கடிக்குள்ளாக்கியது. அதன் தாக்கமே இன்றுவரை தொடர்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.