வெசாக் கொண்டாடத்தில் மக்களை அச்சுறுத்திய மோட்டார் சைக்கிள் கும்பல் கைது
வெசாக் அலங்காரங்களை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், மோட்டார் சைக்கிள்களில் இரைச்சலிட்டுச் சென்ற பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை பண்டாரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.
அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுத்துள்ளனர்.
கும்பல் கைது
கைப்பற்றப்பட்ட பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள், சத்தத்தை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு பாகங்களைச் சேர்த்து, வழக்கமான நடைமுறைகளை மீறி மாற்றியமைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம நகரில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், மோட்டார் சைக்கிள்களுடன் வந்த இளைஞர் குழுவினரைக் கைது செய்து, பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்து, பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்தனர்.
சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்படும் என்றும், மேலும் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.