ஓட்டுநர் உரிம அட்டைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
ஓட்டுநர் உரிமங்கள் வழங்கும் பணி ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் தற்போது எட்டு இலட்சம் ஓட்டுநர் உரிம அட்டைகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (08) நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஓட்டுநர் உரிம அட்டைகள்
மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் உள்ள 800,000 ஓட்டுநர் உரிம அட்டைகள் தீர்ந்து போவதற்குள் மேலும் 1 மில்லியன் ஒட்டுநர் உரிம அட்டைகளை முற்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணியை மெட்ரோபொலிட்டன் என்ற தனியார் நிறுவனம் செய்து வந்ததாகவும், ஒரு ஓட்டுநர் உரிமத்தை அச்சிட ரூ. 534.54 செலவாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், எதிர்காலத்தில் அரசாங்கம் ஒட்டுநர் உரிமங்களை அச்சிடத் தொடங்குவதால், ஒரு ஒட்டுநர் உரிமத்தை அச்சிடுவதற்கு தோராயமாக ரூ. 368.16 செலவாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
அதன்படி, ஒரு ஓட்டுநர் உரிமத்தை அச்சிடுவதில் அரசாங்கம் ரூ.166 சேமிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.




