நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! அஜித் ரோஹண எச்சரிக்கை
தெற்கில் கடந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து தற்போது வரையிலான காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள்
அவர் மேலும் கூறுகையில், “குறித்த சம்பவங்களில் நான்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கொலையாளிகள் இவ்வாறான சம்பவங்களை செய்துவிட்டு தப்பிக்க முடியும் என்று நினைப்பார்களாயின் நாங்கள் ஒரு போதும் அதற்கு இடமளிப்பதில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “எமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சவால்களை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். இன்னும் 6 வாரங்களில் நாங்கள் ஜெயிக்கின்றமா அல்லது குற்றவாளிகள் ஜெயிக்கின்றார்களா என்பதை பார்ப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
மேலும் “ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சுற்றித் திரியவும், இவ்வாறான கொலைகளை முன்னெடுக்கவும் நாங்கள் ஒரு போதும் இடமளிப்பதில்லை.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவரையும் தற்போது நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
இந்த குற்றவாளிகளுக்கு உதவிகளை வழங்குபவர்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.