இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 156 ஆண்டுகள் பூர்த்தி (Photos)
இலங்கை பொலிஸ் சேவையின் 156ஆம் ஆண்டு பூர்த்தி இன்றாகும்.
இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி, பொலிஸ் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில், பொதுமக்கள் தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு என்பனவற்றை மேம்படுத்த பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு
பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடாது பொதுமக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்ற முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்குமார தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் தின வார நிகழ்வுகள் இன்றைய தினம் பொலிஸ் நிலையங்களில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எல்.ஏ.ஈ.சரத்குமார தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது பொலிஸ் கொடியேற்றப்பட்டு தேசிய பொலிஸ் தின வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இன்றைய தினம் மட்டக்களப்பு தலைமைய பொலிஸ்
நிலையத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாராட்டி பரிசு
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எல்.ஏ.ஈ.சரத்குமார,
”ஒரு பொலிஸ் அதிகாரிக்கு பொறுமையும் மற்றவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறியக்கூடிய தன்மை இருக்க வேண்டும்.
உங்களுக்கு தெரியும் அண்மையில் கொழும்பில் நடந்த காலிமுகத்திடல் போராட்டத்தின் போது நாங்கள் நடந்து கொண்ட விதம் இந்த சீருடை அணிந்து கொண்டு எவ்வாறு செயல்பட்டோம் என்பது.
பொலிஸ் திணைக்களம் என்பது பொதுமக்கள், பொதுமக்கள் என்பது பொலிஸ் திணைக்களம் உதாரணமாக சொல்லப்போனால் கடலும் கடலில் உள்ள மீன்களும் போன்று. நீர் இல்லாமல் மீன் வாழ முடியாது பொலிஸிற்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கவேண்டும்.
நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மிக ஒரு விவரவேற்கத்தக்க விடயம். ஆகவே பொலிஸில் பல பிரிவுகள் உள்ளது.
நாங்கள் அனைவரும் ஒன்று இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிறந்த மாவட்டமாக செயற்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.
உங்களுக்கு தெரியும் 2009 வரை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த எமது நாடு இன்று ஒரு சீரான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.
இதற்காக பாரிய பங்கினை பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்தது என்பது நீங்கள் அறிந்த விடயம்” என்றார்.
செய்தி :குமார்
வவுனியா
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் உள்ள பொலிஸ் வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக பொலிஸ் தின வார நிகழ்வுகள் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும், பொலிஸாரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தியதுடன், தேசிய கொடி மற்றும் பொலிஸாரின் கொடி என்பனவும் ஏற்றப்பட்டது.
அத்துடன் இறுதியில் உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுபத் கல கமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி எதிரிசிங்க, பொலிஸ் அதிகாரிகள், பொலிஸார், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், மாவட்ட பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி :திலீபன்
கல்முனை
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் இன்று(3) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வுலருணவு பொருட்களை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி உள்ளிட்டோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த சாய்ந்தமருதைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்கள் கெளரவிக்கப்பட்டு, உலருனவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உலருணவு பொருட்களில் அரிசி,சீனி,தேயிலை,பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் பொலிஸாருக்கான விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றன.
செய்தி:ஷிஹான் பாறுக்
ஹட்டன்
இலங்கையின் 156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஹட்டன் தலைமையக பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் இன்று (03) அட்டன் பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
நாவலப்பிட்டி வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊழியர்கள் இந்த திட்டத்தை மேற்கொண்டனர். இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டன. மேலும், கண் மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்பும் நபர்களை பதிவு செய்ததோடு, உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
செய்தி :கிருசாந்தன்
முல்லைத்தீவு
இலங்கை பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 156 வது ஆண்டை நிறைவு செய்கின்ற நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 156 ஆவது பொலிஸ் தினம் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று விசேட அணிவகுப்பு மரியாதைகள் இடம் பெற்றதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்திலே நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸாரின் சேவைகள் அடிப்படையில் திறமையான பொலிஸார் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பண பரிசல்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பத்து பொலிஸ் நிலையங்களில் தெரிவு செய்யப்பட்ட 76 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பண பரிசில்கள் வருகை தந்த அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அன்மையில் வெளியாகிய உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற ஐந்து மாணவர்களுக்கும் பணபரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார், பொலிஸ் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.