தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றில் தோல்வி
தென் கொரிய(South Korea) ஜனாதிபதி யூன் சுக் யோலை(yoon-suk-yeol) பதவிநீக்கம் செய்யும் முயற்சி நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன..
தென்கொரியாவில் (South Korea) கடந்த 03ஆம் திகதி இரவு தொலைக்காட்சியில் தோன்றி, அவசர இராணுவ சட்டத்தை அறிவித்த அந்த நாட்டு ஜனாதிபதி யூன் சாக் யோல், சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றிருந்தார்.
கொரியாவில் அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை தாக்கல் செய்வதில் அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதன் காரணமாக அங்குத் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.
தென் கொரிய ஜனாதிபதி
இந்த நிலையிலேயே, கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அவசர நிலையை நடைமுறைபடுத்துவதாக ஜனாதிபதி யூன் சுக் அதிரடியாக அறிவித்திருந்தார்.
யூன் சுக் யோல் நடைமுறைப்படுத்திய அவசர நிலை பிரகடனம் மக்களின் கிளர்ச்சிக்கு பின் நீக்கப்பட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதி யூன் சுக் யோல், இராணுவ ஆட்சியை இனி நடைமுறைபடுத்தப்போவதில்லை எனக்கூறி மக்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஜனாதிபதியின் பதவி நீக்கம்
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று(6) நடைபெற்ற நிலையில், யூன் சுக் யோலை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சி அமைச்சர்கள் புறக்கணித்தனர்.
இதன் காரணமாக ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வியடைந்தது.
இதனால் பொதுமக்களின் போராட்டம் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதியின் பதவி நீக்கத்தை ஆதரிப்பதாக ஒரு கணக்கெடுப்பு வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |