தந்தையை தாக்கி எரித்து கொன்ற மகன்:கொழும்புக்கு அருகில் சம்பவம்
கொழும்பின் புறநகர பகுதியான ஹோக்கந்தர தெற்கு வித்தியராஜ மாவத்தையில் நேற்று அதிகாலை தந்தையை மண் வெட்டி மற்றும் பொல்லால் தாக்கி, வீட்டுக்கு எதிரில் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலையாளியான மகன் ஹோக்கந்தர சிங்கப்புர பிரதேசத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்து விட்டு புத்தர் சிலைக்கு அருகில் இருந்த சந்தேக நபர்
சந்தேக நபர் சிங்கப்புர பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்றுக்கு அருகில் இருப்பதாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் இந்திரஜித் என்பவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாலபே பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழு சந்தேக நபரை இன்று காலை 8 மணியளவில் கைது செய்துள்ளது.
வீட்டில் ஏற்பட்ட சண்டையால் நடந்த கொலை
நேற்று முன்தினம் இரவு வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் தந்தை முதலில் கத்தியால் தாக்கியதால், ஆத்திரமடைந்து, தந்தையை மண் வெட்டி மற்றும் பொல்லால் தாக்கி வீட்டின் நுழைவு கதவுக்கு எதிரில் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்ததாக சந்தேக நபர், விசாரணை நடத்திய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சம்பவத்தில் 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சித் சேனாரத்ன என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் முச்சக்கர வண்டி சாரதியாக தொழில் புரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.